கூறினான்” (புற-5) என்று கூறியிருப்பது இங்கே நினைக்கத் தக்கதாகும். மன்னனிடமிருந்து தண்ணடை பெறுவதையே சிறந்த பரிசிலாகக் கருதினர் அக் கால வீரர்கள். ஆதலின், மறக்குடிமகள் தன் மகனுக்கு வேந்தன் தண்ணடை தருதல் வேண்டும் என்று விரும்பினாள். ஈன்று புறந் தருதல் என்னும் புறப்பாட்டு, தாய் தந்தை கொல்லன் மன்னன் மகன் ஆகியவர்களுடைய தலையாய கடமைகளைக் கூறுகின்றது. போர் செய்து வாழ்ந்த மறக்குடியில் தோன்றிய வீரப் பெண்ணின் உள்ளத்திலிருந்து தோன்றிய பாடல் இது! இதில் வீரவுணர்ச்சி தேங்கிக் கிடக்கிறது! 2 ‘சுரையாழ அம்மி மிதக்கிறது’ என்பது ஒரு பழமொழி. நீரில் மிதக்க வேண்டிய சுரை ஆழ்வதும், மூழ்கிவிட வேண்டிய அம்மி மிதப்பதும் இயற்கைக்கு மாறானவை. கனமற்ற பொருள் ஆழ்வதும் கனமுள்ள பொருள் மிதப்பதும் இயற்கையில் நிகழாதவை. பெரியோர் சிறப்பு அடைவதும், சிறியோர் சிறுமை அடைவதும் உலக இயற்கை. இம்முறை மாறிச் சான்றோர் மூலையில் ஒடுங்கி வாழ, கீழ்மக்கள் செருக்கித் தலை நிமிர்ந்து நடப்பது உலக இயற்கைக்கு மாறானது; சுரையாழ அம்மி மிதப்பது போன்றது. இக் கருத்தை, உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் வரைதாழ் இலங்கருவி வெற்ப அதுவே சுரையாழ அம்மி மிதப்பு (123) என்று பழமொழி நானூறு விளக்குகின்றது. இப்பாடலுக்குப் பழைய உரை பின்வருமாறு உள்ளது. “புகழமைந்த சான்றோர் விளங்காது ஒடுங்கி வாழ்தல், தூய குடியினர் அல்லாத கீழோர் செல்வத்தால் ஓங்கிப் பெருகல், வரைதாழ் இலங்கு அருவி வெற்பனே! அஃது அன்றோ, சுரை ஆழ அம்மி மிதப்பதனோடு ஒக்கும்”. இப் பகுதிக்கு விளக்கம் எழுதிய செல்வக் கேசவராய முதலியார், “நீரில் சுரை ஆழ்வதும், மிதப்பதும் |