பக்கம் எண் :

735நோக்கு

      பயப்பே பயனாம் பசப்புநிற னாகும்

என்றும்,

      இயைபே புணர்ச்சி இசைப்பு இசையாகும்

என்றும் இணைப்பது பொருத்தமாக உள்ளது. எதுகை நோக்கிச் சிலவற்றை
இரண்டு அடிச் சூத்திரங்களாக அமைக்கலாம்.

    வம்புநிலை இன்மை                    (உரியியல் -30)
    மாதர் காதல்                         (உரியியல் -31)
    நம்பும் மேவும் நசையா கும்மே          (உரியியல் -32)

இவற்றைச் சேர்த்து,

    வம்புநிலை இன்மை மாதர் காதல்
    நம்பும் மேவும் நசையா கும்மே

என்று இரண்டு அடியாக எதுகை மோனை அமைந்த ஒரு சூத்திரமாக
அமைக்கலாம்.

    வயவலி யாகும்                   (உரியியல் -68)
    வாள்ஒளி யாகும்                 (உரியியல் -69)
    துயவென் கிளவி அறிவின் திரிபே  (உரியியல் -70)

என்பவற்றை,

    வயவலி யாகும் வாள்ஒலி யாகும்
    துயவென் கிளவி அறிவின் திரிபே

என்றும்,

    உயாவே உயங்கல்
    உசாவே சூழ்ச்சி
    வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம் (உரியியல்-71-73)

என்பனவற்றை,

    உயாவே உயங்கல் உசாவே சூழ்ச்சி
    வயாவென் கிளவி வேட்கைப் பெருக்கம்

என்றும் இணைக்கலாம்.

     சிவப்பிரகாசம் என்னும் நூலின் அவையடக்கத்தில்,

    தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா
    இன்று தோன்றியவாம் எனும்எவையும் தீதாகா

என்று உமாபதி சிவாசாரியர் கூறியுள்ள கருத்து, பொன்னே போல் போற்றி
மேற்கொள்ளத்தக்கதாகும்.