பக்கம் எண் :

உரையாசிரியர்கள்738

அதற்கு ஏற்றவாறு உதாரணம் காட்டுகின்றனர். இதனால் ஏற்றம் எற்றம்
என்ற இரு சொற்களில் எது சரியானது என்ற வினாவை எழுப்பிக் கொண்டு
டாக்டர் இராம. சுந்தரம் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்
(பேராசிரியர் அரசு நாராயண சாமி நாயுடு நினைவு மலர் (1973), பக் (48-50).

     பண்டைய உரையாசிரியர்களின் கருத்துக்களைக் கீழே காண்போம்.

இளம்பூரணர்

    ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்       (உரியியல் - 40)

    (வ-று) ‘ஏற்றத்திருந்தார்’ என்றக்கால், நினைந்திருந்தார் என்பதூஉம்,
துணிந்திருந்தார் என்பதூஉம் ஆம்.

சேனாவரையர்

    ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்       (உரியியல் - 41)

    (இ-ள்) கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி (குறுந் -142)

     ‘ஏற்றேற்றம் இல்லாருள் யான் ஏற்றம் இல்லாதேன்’ எனவும் நினைவும்
துணிவும் ஆகிய குறிப்புணர்த்தும்.

தெய்வச்சிலையார்

    ஏற்றம் நினைவும் துணிவும் ஆகும்       (உரியியல் -41)

    (எ.டு) கானலஞ் சேர்ப்பன் கொடுமை ஏற்றி (குறுந் - 145)

     - இது நினைவு.

      ஏற்றென் றிரங்குவ செய்யற்க - இது துணிவு.

நச்சினார்க்கினியர்

    எற்றம் நினைவும் துணிவும் ஆகும்       (உரியியல் - 39)
    (எ.டு) கானலஞ் சேர்பன் கொடுகை எற்றி  (குறுந் - 145)
    எற்றமிலாட்டி என் ஏமுற்றாள்           (கலி - 144, 63)

8. இடைச்செருகல்

    பழைய நூல்களிலும் உரைகளிலும் பிற்காலத்தவர் தம் கருத்தைத்
தாமே எழுதிச் சேர்த்துவிடுவது உண்டு. புதிய பாடல்கள் இயற்றியும், உரை
இயற்றியும் சிலர் பழைய நூல்களில் சேர்த்துவிடுவதுண்டு. இவ்வாறு சேர்த்த
பகுதியை ‘இடைச் செருகல்’ என்பர். பழைய நூலின் இடையில் தாம்
எழுதியவற்றைச் செருகுதலின் இடைச்செருகல் எனப்பட்டது.