பக்கம் எண் :

739நோக்கு

     புதிதாக எழுதிச் சேர்ப்பது மட்டுமின்றி, பழைய நூலின் மூலத்தையோ
உரையையோ தம் கருத்திற்கு ஏற்பச் சிலர் திருத்தி விடுதலும் உண்டு.

     இவ்வாறு செய்வதற்குக் காரணங்கள் சில உள்ளன.

     1. பெரியோர் நூலில் தாம் இயற்றிய பாடலும் சேர்ந்து, பூவோடு
சேர்ந்த நாரும் மணம் பெறுவதுபோல் பெருமையடைவதைச் சிலர் விரும்பி
இடைச்செருகல் செய்தனர்.

     2. தம் சமயம், கொள்கை ஆகியவற்றிற்கு மாறானவற்றை நீக்கிவிட்டு,
தம் கருத்திற்கு ஏற்ப மாற்றினர்.

     3. பழைய நூல்களைப் பதிப்பித்தவர்கள், கிடைக்காத பகுதிகளுக்கு,
தாமே எழுதி அவ்விடத்தை நிரப்பியதும் உண்டு.

     கந்தியார் என்ற பெண்பாற்புலவர் பரிபாடல் சீவக சிந்தாமணி ஆகிய
இரண்டு நூல்களிலும் இடைச்செருகலாகப் பாடல்களை எழுதிச் சேர்த்தார்
என்ற செய்தி பரிபாடலின் உரைச் சிறப்புப்பாயிரத்தாலும், நச்சினார்க்கினியர்
உரையாலும் வெளிப்படுகின்றது.

     கந்தியார் என்ற பெயரைத் தாங்கிய பெண்பாற்புலர் சமணசமயத்
துறவி என்று பெருந்தொகை குறிப்பிடுகின்றது. கவுந்தி என்பது, கந்தி என்று
மாறியுள்ளது.

     “பெரிய புராணம் கம்பராமாயணம் முதலிய நூல்களில்
வெள்ளியம்பலவாணர் சில பாடல்களை நூதனமாக இயற்றி இடையிடையே
செருகிவிட்டார். காலக்கிரமத்தில் அச்செயல் கண்டுபிடிக்கப்பட்டது.
சென்னையில் முன்பிருந்த காஞ்சிபுரம் மகாவித்துவான் ஸ்ரீ சபாபதி முதலியார்
அவர்கள் சிலவற்றை அச்சிட்டபோது ‘இவை வெள்ளிப் பாடல்கள்’ என்று
அவற்றை நீக்கிவிட்டு அச்சிட்டார்.”*

     ஊர் பேர் தெரியாத சிலர், எழுதிச் சேர்த்தவையும் உண்டு.
குறுந்தொகையில் நானூறுக்கு மேற்பட்டுள்ள பாடல்கள் இடைச்செருகல்
ஆகும்.

     தக்கயாகப் பரணியில் ‘பள்ளிக்குன்றும்’ (536) என்னும் செய்யுள்
உரையின்கீழ் அதன் உரையாசிரியர், “இப்பாட்டு, கவிச்சக்கரவர்த்திகள்
வாக்கல்ல என்பாரும் உளர்” என்று குறிப்பிடுகின்றார்.


 

 * சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் - பக்கம் 176. டாக்டர் உ.வே.சா.