மூலத்தை மாற்றுதல் இலக்கண விளக்க நூலாசிரியர், “பழையன கழிதலும்” என்ற நன்னூல் சூத்திரத்தை, பழையன கழித்தலும் புதியன புகுத்தலும் வழுவல கால வகை யினான என்றும், நன்னூலுக்கு உரை இயற்றிய இராமாநுசக் கவிராயர், தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு எய்தும் எகரம் ஒகரம் மெய்புள்ளி (நன்-எழுத்-43) என்ற நன்னூல் சூத்திரத்தை, தொல்லை வடிவின எல்லா எழுத்தும் ஆண்டு எய்தும் ஏகாரம் ஓகாரம் மெய்புள்ளி என மாற்றி விட்டார்கள். சமயப்பற்றின் காரணமாக மூலத்தைச் சிலர் மாற்றினர் என்பதை ஆராய்ச்சி அறிஞர் மயிலை. சீனி வேங்கடசாமி கூறுகின்றார். “சமயப் பற்றுக் காரணமாக ஏற்பட்ட இந்தக் குறுகிய மனப்பான்மையினால், பாரதம், கம்ப இராமாயணம் முதலிய நூல்களை 19 - ஆம் நூற்றாண்டில் ஏட்டுச் சுவடியி்லிருந்த அச்சுப் புத்தகமாக அச்சிட்டவர் சிலர், சிவபெருமானுக்கு ஏற்றம் தந்த செய்யுள்களை மாற்றியும் சிதைத்தும் புதுக்கியும் அச்சிட்டனர். சில நூல்களின் முதலில் அருகக் கடவுள் வாழ்த்துக் கூறிய செய்யுட்களைச் சிலர் எடுத்துப்போட்டு, அந்த இடத்தில் விநாயகர் வணக்கப்பாடல் அமைத்து அச்சிட்டனர். நிகண்டுகளில் அருகப் பெருமானுக்குக் கூறப்பட்ட செய்யுள்களை மாற்றிவிட்டனர். இவ்வாறு சமயப் பற்றுக் காரணமாகச் சிலர் அச்சுப் புத்தங்களை அச்சிட்ட போது மாற்றினார்கள்.1 சமயப்பற்றுக் காரணமாக உரையைத் திருத்தி எழுதியதும் உண்டு. டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர் சிந்தாமணி (நச்சினார்க்கினியர்) உரையில் அத்தகைய மாற்றம் ஒன்றினைத் தாம் கண்டதாகக் குறிப்பிடுகின்றார். “சிந்தாமணி உரையில் ஓரிடத்தில் ‘பஞ்சாட்சரம்’ உபதேசிக்கப்பட்டதாக எழுதியிருந்தது. சிந்தாமணியே சைனர்களுடைய நூல். இறக்கும் நிலையிலிருந்த ஒரு நாயின் காதில் மந்திரம் உபதேசிக்கப்பட்டதென்பது சந்தர்ப்பம். 1. 19 ஆம் நூற்றாண்டில் - தமி்ழ் இலக்கியம் பக்கம் 86. |