உரையைத் பிரதி செய்தவர் உரையாசிரியர் எழுதியிருந்த ‘பஞ்சநமஸ்காரம்’ என்பதை, ‘பஞ்சாட்சரம்’ என்று எண்ணி விட்டாரென்று தோன்றியது. அந்தப் பிரதி சைவர் ஒருவருடைய பிரதி. பஞ்சநமஸ்காரம் என்பது சைனர்களுடைய மந்திரம்”1 இத்தகைய மாற்றங்களேயன்றி, முன்னோர் உரைகளைப் படித்த மாணவர்கள், தாம் விளங்கிக் கொள்வதற்காக எழுதிய உரைவிளக்கக் குறிப்புகளும் உரையோடு சேர்ந்து விட்டன. வேறு சில ஏடுகளை ஒப்பிடுகையில் அத்தகைய பிற்சேர்க்கைகள் அறிந்து விலக்கப்பட்டன. வீரசோழிய உரையைப் படித்த ஒருவர், ஆங்காங்கே உரையின் கீழ் எழுதிச் சென்ற விளக்கக் குறிப்புகளை வேறு பிரதிகளைக் கொண்டு அறிந்து உரையிலிருந்து நீக்கி அடிக்குறிப்பில் அவற்றைச் சேர்த்து, பவானந்தம் பிள்ளை வீரசோழிய உரையை வெளியிட்டுள்ளார். அச்சில் உள்ள நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில், பிற்காலத்தவர் அவ்வுரையைப் படித்தவர் எழுதிச் சேர்த்த விளக்கக் குறிப்பும் சிற்சில இடங்களில் கலந்துள்ளது என்று எண்ண இடமுண்டு. இதே போல திருக்கோவையாருக்குப் பேராசிரியர் எழுதிய உரையிலும், அவ்வுரையைப் படித்த ஒருவர் எழுதிய விளக்கமும் இடையிடையே சேர்ந்துள்ளது. இவ்வாறு படித்தவர்களால் எழுதிச் சேர்க்கப்பட்ட உரைப்பகுதிகள் உரையாசிரியர்கள் கூறினவற்றிற்கு விளக்கவுரைகளாக அமைந்துள்ளன. அப் பகுதிகள் நடைப்போக்கில் வேறுபட்டுக் காணப்படுவதோடு, பிழைகள் மலிந்தனவான உள்ளன. அகத்திணை இயலிலுள்ள ‘திணைமயக் குறுதலும் கடிநிலை யிலவே’ எனத் தொடங்கும் சூத்திரத்திற்குக் கூறப்பட்டுள்ள விளக்கவுரையினை இவற்றிற்கு ஓர் உதாரணமாகக் காட்டலாம்.2 ஓர் உரையாசிரியரின் உரையில் மற்றோர் உரையைப் பெய்து விடுதலும் உண்டு. தஞ்சை சரசுவதி மகால் நூல் நிலையத்தில் இருந்த திருக்கோவையார் பழையவுரை அடங்கிய ஏட்டுச் சுவடியில் 281-ஆம் பாடலுக்குப்பின், பழையவுரைக்கு ஈடாகப் பேராசிரியர் உரையைத் தழுவி எழுதிச் சேர்க்கப்பட்டிருந்தது. திருக்குறள் பரிதியார் உரையில் 1126-ஆம் குறளுக்குப் பரிமேலழகர் உரை தரப்பட்டுள்ளது. காலிங்கர் உரையும் பரிதியர் 1. ‘சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்’ - பக்கம் 170. 2. தமிழ் உரைநடை வரலாறு (1957) வி. செல்வநாயகம், பக்கம் - 67 |