பக்கம் எண் :

உரையாசிரியர்கள்742

உரையும் 161, 166, 167, 191, 193, 194, 1313, 1324 ஆகிய குறட்பாக்களுக்கு
ஒரே வகையாய் உள்ளன.

     இவை எல்லாம், உரைகள் அச்சேறுமுன் ஏற்பட்ட மாறுதல்கள். பழைய
உரைகளை அச்சிட முயன்ற காலத்தில் இடையிடையே மறைந்தும் சிதைந்தும்
குறைந்தும் போன பகுதிகளை நிரப்பப் பதிப்பாசிரியர்கள் பிற உரைகளின்
துணை கொண்டு புதிதாக எழுதி அவ்விடங்களை நிரப்பி அச்சிட்டனர். தாம்
செய்த மாறுதல்களைப் பதிப்பாசிரியர்கள் நேர்மையாக எடுத்துக் கூறி, தரம்
எழுதிச் சேர்த்த பகுதிகளை அடையாளமிட்டுக் காட்டினர்.

     தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணர் உரையை முதலில்
பதிப்பித்த அறிஞர் வ.உ. சிதம்பரனார் முன்னுரையில், பின்வரும்
செய்தியைக் கூறுகின்றார்.

     “இப்போது வெளியிடும் பகுதியில் ஒரு சில இடங்களில் இளம்பூரணர்
உரை மறைந்துபோய்விட்டது. இவ்விடங்களில் நச்சினார்க்கினியர் உரையைத்
தழுவி உரை எழுதிச் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வகையான இடங்கள்
ஆங்காங்கே அடையாளமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இருதலைப் பகரத்துள்
அமைந்துள்ள எழுத்துகளும் சொற்களும் இன்றியமையாமை பற்றிப் புதிதாகச்
சேர்க்கப்பட்டனவாகும்.”

     இவ்ளவு நேர்மையாக - வெளிப்படையாக உண்மையை, முதலில்
பதிப்பித்தவர் எடுத்துக்கூறி இருந்தபோதிலும், இளம்பூரணர் உரையை
மீண்டும் பதிப்பித்தவர்கள் அடையாளங்களை நீக்கிவிட்டனர். எல்லாம்
இளம்பூரணர் உரையே என்று நம்புமாறு செய்துவிட்டனர்!

     அச்சில் வெளி வந்துள்ள திருக்குறள் மணக்குடவர் உரையில்,
பரிமேலழகர் உரை கலந்துள்ளது. மணக்குடவர் உரையை வெளியிட்ட
திரு. கா. பொன்னுசாமி நாடார், தம் பதிப்பில் மணக்குடவர் உரை
கிடைக்காத குறள்களுக்குப் பரிமேலழகர் உரையையே தந்துள்ளார்.
அண்மையில், சென்னை மலர் நிலையத்தார் வெளியிட்டுள்ள மணக்குடவர்
உரையில், மணக்குடவர் உரை கிடைக்காத இடங்களைப் பரிமேலழகர்
உரையே நிரப்பியுள்ளது.

     பரிப்பெருமாள் உரையை முதன் முதலில் வெளியிட்ட தமிழறிஞர்
டி.பி. பழனியப்ப பிள்ளை பரிப்பெருமாள் உரை கிடைக்காத இடங்களில்
மணக்குடவர் உரையைத் தந்து, அதனை மணக்குடவர் உரை என்று
மறவாமல் குறிப்பிட்டுள்ளார். மணக்குடவர் உரையும் பரிப்பெருமாள்
உரையும் பெரும்பாலும்