பக்கம் எண் :

உரையாசிரியர்கள்744

நன்கு விளக்கமடையும். தனிப்பாடல் திரட்டு, பெருந்திரட்டு, பெருந்தொகை
போன்ற பிற்காலத் தொகை நூல்களுக்கு உரை எழுதுதல் சிறந்த இலக்கியப்
பணியாகும்.

     உரை இல்லாத இலக்கண நூல்கள் சில உள்ளன. தண்டபாணி அடிகள்
(1839-1898) இயற்றிய அறுவகை இலக்கணம் 786 சூத்திரங்களைக் கொண்டது.
ஐந்திலக்கணத்தோடு ஆறாவதாகப் ‘புலமை இலக்கணம்’ என்று ஓர் புதிய
இலக்கணத்தைக் கூறுகின்றது. இந்த நூலுக்கு உரை இல்லை.

     இலக்கண தீபம், (இயற்றியவர் பெயர் தெரியவில்லை) செந்தமிழ் 14
தொகுதியில் உள்ளது) என்னும் இலக்கண நூலுக்கும் உரைகள் இல்லை.

10. மறைந்து போன உரை நூல்கள்

          ஏரணம் உருவம் யோகம்
         இசைகணக் கிரதம் சாலம்
         தாரணம் மறவே சந்தம்
         தம்பம்நீர் நிலம்உ லோகம்
         மாரணம் பொருள்என்று இன்ன
         வாரணம் கொண்டது அந்தோ,
         வழிவழிப் பெயரும் மாள!
                                   -பழம்பாடல்

    பழம்பெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியம் தோன்றிப்
பல நூறு ஆண்டுகள் வரை-இளம்பூரணர் காலம் வரை உரையின்றியே
பயிலப்பட்டு வந்தது என்பது பொருந்தாது. இளம்பூரணருக்கு முன், வேறு
உரைகள் அந்நூலுக்கு இருந்திருக்க வேண்டும். தொல்காப்பியத்திற்கு இன்று
கிடைக்கும் உரைகளில் இளம்பூரணர் உரையே பழமையானது என்று
கொள்ளவேண்டும். தம் உரைகளில் ‘என்றும் கூறுவர்’, ‘என்று உரைப்பாரும்
உளர்’ என்று பலப் பல இடங்களில் குறிப்பிடுகின்றார். சில சூத்திரங்களுக்கு
வேறு உரைகளையும் தருகின்றனர். எனவே இளம்பூரணருக்கு முன், வேறு
சில உரைகள் தொல்காப்பியத்திற்கு இருந்தன என்பது உறுதி.

     இவ்வாறே இறையனார் அகப்பொருள் உரையாசிரியர் ‘ஒருசார்
ஆசிரியர் கூறுவது’, ‘ஒருவன் கூறுவது’ என்றும் ‘உரைப்பர்’ என்றும்
குறிப்பிடுவது அவருக்கு முற்பட்ட உரைகளை என்னலாம்.