புறநானூற்றின் பழைய உரையாசிரியர், சிலப்பதிகாரத்தின் அரும்பத உரையாசிரியர் ஆகியோரும் தமக்கு முன் வேறு உரைகள் அவ்வவ் நூலுக்கு இருந்ததைக் குறிப்பிடுகின்றனர். பத்துப்பாட்டிற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் தமக்கு முன் அந் நூலுக்கு இருந்த வேறு உரைகளைச் சுட்டுகின்றார். இவ்வாறு பழைய உரையாசிரியர்கள் தமக்கு முற்பட்டவர்களின் கருத்தாகக் கூறுபவை எல்லாம் அவர்களுக்கு முன்னர், வழங்கிவந்த உரைநூல்களில் இருந்தவை என்னலாம். ‘மறைந்துபோன தமிழ் நூல்கள்’ என்ற நூலில் குறிக்கப் பெறும் பல தமிழ் நூல்களுக்கு உரைகளும் இருந்திருக்கும். அவற்றைப் பற்றி நாம் ஒன்றும் அறிந்துகொள்ள இயலவில்லை. இயற்றியவர் பெயர் முதலியன தெரியாமல் மறைந்து போன உரைநூல்கள் பல உள்ளன. உரையாசிரியர் பெயர் முதலிய விவரம் தெரிந்த உரைநூல்கள் பல, கிடைக்கவில்லை. ஏட்டுச் சுவடிகளில் இருந்த பல உரைகள் மறைந்துபோனதற்குக் காரணங்கள் உள்ளன. போற்றுவார் இன்மையால், சில நூல்கள் மறைந்தன. வேற்று நாட்டவர் படையெடுப்பால், சில நூல்கள் மாண்டன. சமயக் காழ்ப்பு, சில நூல்களை வீழ்த்தியது. கல்லாத மக்களின் பொல்லாத மடமை, சில நூல்களை மாய்த்தது. வெள்ளமும் தீயும், சில ஏடுகளை அழித்தன. கறையான்கள், சில நூல்களைத் தின்று தீர்த்தன. போற்றுவார் இன்மையால் சிதைந்துவரும் ஏட்டுச் சுவடிகளைப்பற்றித் தமிழறிஞர் ஒருவர், “நூல்களுள் ஒரு சில, எடுப்பாரும் எழுதுவாரும் படிப்பாரும் பாலிப்பாரும் அற்றுக் காலப் பழமையால் செல்லரித்து, இராம பாணங்களால் துளைப்புண்டு, உட்கி மட்கிப் பெயரளவினவாகி விட்டன. சில அடி நுனியற்று முற்றும் கிடைப்பதற்கு அரியனவாய் விட்டன. இன்னும் சில நூல்கள் ஒப்பு நோக்கிக்கொள்வதற்குக் கூட யாண்டும் அத்தகைய பிரிதொன்று கிடைப்பதற்கரிய நிலையில் அருகிவிட்டன” என்று எழுதியுள்ளார்.* ‘சேர நாடும் செந்தமிழும்’ என்ற நூலின் ஆசிரியர், “திருவனந்தபுரம் அரண்மனையைச் சார்ந்து பழைய ஏட்டுப் பிரதிகள் அடங்கிப் சுவடிச் சாலை ஒன்று உண்டு: அதில் தமிழ், மலையாளம், சமஸ்கிருதம் என்னும் மூன்று மொழிகளிலும் அமைந்த ஏடுகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் தமிழேடுகள் பலவும் கவனிப்பார் இல்லாமையால் அழிந்த போயின” என்று * செந்தமிழ்; 19ஆம் தொகுதி, பக்கம் 313. |