நன்னூலின், எழுத்திகாரம், சொல்லதிகாரம் ஆகிய இரு பகுதிகள் தவிர மற்றவையும் மயிலைநாதர் உரையும் மறைந்து போயின. குறுந்தொகை உரை அறிஞர் ரா. இராகவையங்கார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றியபோது குறுந்தொகை முழுமைக்கும் அரிய விளக்கவுரை எழுதி முடித்தார். ஆனால் 112 பாடலுக்கே இவர் உரை, நூல் வடிவம் பெற்று வெளிவந்துள்ளது. குறுந்தொகை விளக்கத்தின் முகவுரையில்்டாக்டர் அ. சிதம்பரநாதச் செட்டியார் ‘அவ்வுரையில் அப்போது கிடைத்துள்ள ஒரு பகுதியாகிய நூற்றுப் பன்னிரண்டு பாடல்களின் உரை, இப்போது அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடாக வெளி வருகின்றது’ என்று கூறுகின்றார்கள். அச்சு யந்திரங்கள் பெருகியுள்ள இக் காலத்திலும் அச்சேறாத எத்தனையோ கையெழுத்துப் பிரதிகள் மறைந்து வருகின்றன. கையெழுத்துப் பிரதியைப் போற்றாமை, படி எடுத்துக் காப்பற்றாமை, உரிய நேரத்தில் ஆசிரியரே அச்சிடாமை போன்ற குறைபாடுகளால் இன்றும் பல அரிய நூல்கள் அழிந்து வருகின்றன. அச்சகங்களுக்குச் செல்லும் கையெழுத்துப் பிரதிகள் திரும்ப வெளியே வருவது மிக அரிதாக உள்ளது. பனையோலைச் சுவடிகள் அழிந்தது எல்லாம் பழங்காலத்தில் என்றால், புது உலகம் விழிப்படைந்துவிட்டது என்று வாய் வீரம் பேசி வரும் இந்நாளில் கையெழுத்துப் பிரதிகள் மறைந்து போவதையும் அழிந்து போவதையும் தடுக்க முடியவில்லை! போனது போகட்டும் கண்மணியே-இனி யாகிலும் புத்தியுடன் இருப்போம்! என்ற நாமக்கல் கவிஞரின் பொன்னான அறிவுரையை எதிர் காலம் இனிது போற்றி, நலம் பெறுக ! |