பிற்சேர்க்கை 1 குயவனும் கணக்கனும் கர்னாடக துரைத்தனத்தில் ஓர் ஆற்றினிடத்தில் ஆயிரம் பொதிமாட்டு வர்த்தகர் வந்து இறங்கி இருக்கையில், ஆற்றில் வெள்ளம் வந்து அங்கு இறங்கி இருந்த பொதிகளையும் மாடுகளையும் வர்த்தகர்களையும் அடித்துக்கொண்டு போக; விடிந்தபொழுது அவர்களில் தப்பிப் பிழைத்தவர்கள் விசனப்படுவதை, ஆற்றுக்கு அடுத்த கிராமத்தில் இருந்த கணக்கன் கண்டு, தனக்குப் பகையாளாகிய குயவன் குடியைக் கெடுப்பதற்கு இதுதான் சமயம் என்று நினைத்து வார்த்தகர்களை அந்தக் கிராமத்தார் இடத்தில் போய் முறையிட்டுக் கொள்ளச் சொல்லி, ‘கிராமத்தார் இதற்கு நாங்கள் என்ன செய்கிறது என்றால் இந்த நஷ்டம் குயவன் கொடுக்க வேண்டியது. இவ் விஷவயத்தை ஊர்க்கணக்கனைக் கேட்டால் தெரிய வரும்’ என்று வர்த்தகர் சொல்லும்படி செய்வித்து, கிராமத்தார் தன்னைக் கேட்கையில், “அப்படிதான் வழக்கம்; கணக்கைப் பார்க்க வேண்டும்!’ என்று சொல்லி, வீட்டில் புகுந்து பின் வருகிறபடி ஓர் ஏட்டில் எழுதி அது பழமையாகத் தோற்ற, நெல்லுப் பானையில் வைத்து வேவித்து, வெகுநாளைக் கணக்குக் கட்டின் நடுவிலே கோர்த்துக் கட்டி, கட்டோடு எடுத்துவந்து கிராமத்தாருக்கு முன் அவிழ்த்து, அதற்குள் தேடி எடுப்பது போல அந்த ஏட்டை எடுத்து, “காட்டெரு முட்டை பொறுக்கி, மட்கலஞ் சுட்ட புகைபோய் மேற்கே கிளம்பி, மின்னுக் குமுறி மழைபொழிய ஆற்றில் வெள்ளம் பெருகி அடித்துப் போன பல சரக்கை ஊரார் இழுப்பது வழக்கு: குயவன் இறுப்பது கணக்கு” என்று வாசித்துக் காட்ட, சரிதான் என்று கிராமகத்தார் ஒப்புக் கொண்டு அந்த நஷ்டத்தை, ஊர்க் குயவனைக் கொடுக்கச் சொல்லித் தீர்த்தார்கள். குயவன், ‘ஐயையோ, தெய்வமே ! இதுவும் தலைவிதியா!’ என்று, உப்புச் சட்டி வறவோடும் விற்று வர்த்தகருக்குத் தொலைத்தான். - விநோத ரச மஞ்சரி (1937), பக்-55 |