அம்பலப்படுத்தினார். பின் தலைமுறையில் தோன்றிய தேசிய எழுச்சிக்கும் அரசியல் விழிப்புணர்ச்சிக்கும் இவ்வகைப் பாடல்கள் பெரிதும் துணை புரிந்துள்ளன. நானூறுபாக்கள் கொண்ட நீதிநூல் ஒன்றையும் புனைந்தருளினார். இந்நூலில் சமூகத்தின் பல்வேறு துறைகளிலுள்ள அநீதிகளை எல்லாம் அலசிக் காட்டியுள்ளார். பிரிட்டிஷ் பேரரசின் ஆதிக்கத்திற்கு இந்தியப் பெருநாடு அடிமைப்பட்டதன் விளைவாக, இந்திய சமுதாயத்தில் அடிமைப்புத்தி தலைக்குத் தலை தலைகாட்டியது. இதனால் "தோன்றிய பல்வேறு தீமைகளை அச்சமின்றிச் சாடினார். "பிரதாப முதலியார் சரித்திரம்" என்னும் நாவல் ஒன்றைப் படைத்தார். தமிழிலே முதன்முதலாக நாவல் படைத்த பெருமை வேதநாயகருக்கே உரிமை. வேதநாயகர், நேரடியாக ஆங்கிலப் பேரரசை எதிர்க்கவில்லை என்றாலும், ஆங்கில மொழியின் ஆதிக்கத்தை அதன் ஆரம்பக் கட்டத்திலேயே மிகமிகக் கடுமையாக எதிர்த்தார். அரசியல் உரிமைக்கு மொழியுரிமையே மூலவேர் என்று கருதினார். தமிழோடு தமிழ் மக்களுக்குள்ள தொடர்பை விளக்குங்கால், நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததுந் தமிழ்; நம்மைத் தாலாட்டித் தூங்க வைத்ததும் தமிழ்; வீட்டு பாஷையும் தமிழ்; நாட்டுப்பாஷையும் தமிழ்.1 என்று தாய்மொழிப் பற்றுடைய மக்களின் உணர்வு இனிக்க, ஊன் இனிக்க, உயிர் இனிக்கக் கூறியுள்ளார். கோபாலகிருஷ்ண பாரதியார் வள்ளலார் - வேதநாயகனார் காலத்திலே வாழ்ந்த கோபால கிருஷ்ண பாரதியார், சமய சமூக சீர்திருத்த இலக்கியம் படைப்பதிலே பெரும் பங்கு கொண்டார். அவர் இயற்றிய "நந்தனார் சரித்திரக் கீர்த்தனை", சமய வைதிகத்தையேயன்றி, அதனைப் "போஷித்து வளர்த்து வரும் நிலப்பிரபுத் துவத்தையும் தாக்கியது. அதுதான் தமிழில் முதன் முதலில் தோன்றிய சீர்திருத்த நாடகமாகும். சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய திருத்தொண்டர் புராணத்துள் வரும் "திருநாளைப்போதுவார்" கதைதான் "நந்தனார் 1.பிரதாப முதலியார் சரித்திரம்:பக்.325 |