பக்கம் எண் :

டாக்டர். ம.பொ.சிவஞானம் 43

ஆங்கிலத்திலே வாதிப்பது ஆச்சரியமல்லவா?ஆங்கில அதிகாரிகள் கூட இத்
தேச    மொழியிலே   பரீட்சையில்   தேற   வேண்டும்   என்ற   சட்டம்
ஏற்பட்டிருக்கிறது.  அப்படியிருக்க, தமிழ் வக்கீல்கள் தாய் மொழியைத் தள்ளி
விட்டு  அன்னிய  மொழியிலே  வாதிப்பது  அசந்தர்ப்பம்  அல்லவா? தமிழ்
நன்றாகத்  தங்களுக்குப்  பேச வராது என்று  கௌரவம் போலச்  சொல்லிக்
கொள்கிறார்கள். இதனினும் இழிவு வேறொன்றில்லை.

     "ஒவ்வொரு  வழக்கிலும்  உண்மையைக் கண்டுபிடித்து நீதி வழங்குவது
கோர்ட்டார்  கடமை.  தாய்மொழியிலே கோர்ட்டு  நடவடிக்கைகள் நடந்தால்
மட்டும்  உண்மை  வெளியாகுமே அன்றி, மக்களுக்குப் புரியாத மொழியிலே
நடந்தால், எப்படி உண்மை வெளியாகும்?

     "விசாரணைகள், தீர்ப்புக்கள், அபராதங்கள், ஆக்கினைகள் அனைவரும்
அறிவது   நல்லதல்லவா?  விவகாரங்களைக்  கேட்டு,  அதனால்,  விவேகம்
அடைவதற்காகக்  கோர்ட்டு  வாசல்களிலே  மக்கள் கூடுகிறார்கள். ஆனால்,
அவர்களுக்குப் புரியாத மொழியிலே விவகாரம் நடப்பதால், குருடன் கூத்துப்
பார்க்கப்போன கதையாய் முடிகிறது. சுருங்கச் சொன்னால்,தமிழ் நியாயாதிபதி
முன் ஆங்கிலத்திலே வாதிக்கிற தமிழ் வக்கீல்கள், தமிழ் மொழியையும் தமிழ்
மக்களையும் அவமதிக்கிறார்கள்."1

     வேதநாயகர்   காலத்தில்   நீதிமன்ற   நடவடிக்கைகளிலே  வழக்கின்
இறுதியிலே வக்கீல்கள் விவாதிப்பது (ஆர்க்யூமெண்ட்) மட்டும் ஆங்கிலத்தில்
நடந்திருக்க  வேண்டும்.   அதைக்கூட  சகித்துக்  கொள்ளாத  வேதநாயகர்,
நடவடிக்கைகள்    எல்லாமே   ஆங்கிலத்தில்    நடைபெறும்   இன்றைய
நீதிமன்றங்களைக் கண்டால் என்ன சொல்லுவாரோ? சபிப்பார்!

வடமொழி ஆதிக்க எதிர்ப்பு!

     பரிதிமாற்  கலைஞர், சம்ஸ்கிருத  மொழியின்  ஆதிக்கத்தை  மிகவும்
கடுமையாக   எதிர்த்தார்;  ஆங்கில  மொழியின்  ஆதிக்கத்தையும்  அவர்
வெறுத்தார்.