சாதி, வருணம், சமயம், சாத்திரம் என்னும் பெயர்களால் வலியோர்
எளியோரைக் கொடுமைப்படுத்தி வந்த நிலையில் ஆங்கிலேயர் இந்த நாட்டில்
புகுந்து அரசோச்சத் தொடங்கினர். அன்னார் இந்தியாவை ஆளத்
தொடங்கியதுமே, சமூகக் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்க இங்கு
மங்குமாகச் சில சட்டங்கள் செய்தனர். அதனால் கவர்ச்சி பெற்ற சமூக
சீர்திருத்த வாதிகள், ஆங்கிலேயர்களின் அரசியல் ஆதிக்கத்தை ஆதரித்தனர்.
இராஜாராம் மோகன்ராய் அவர்கள் இதற்குச் சிறந்த சான்றாவார். பிறப்பால்
அந்தணரான சாஸ்திரியார், வருணாசிரமக் கொடுமைகளை வெறுத்தவராதலால்,
அவரும் ஆங்கிலேயரின் அரசியல் ஆதிக்கத்தை ஆதரித்தார் போலும்!
ஆங்கிலேயராட்சியை முணுமுணுப்பின்றி ஏற்றுக் கொண்ட சாஸ்திரியார்,
தமிழர் மீது ஆங்கிலம் பெற்றிருந்த ஆதிக்கத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள
மறுத்ததோடு, எதிர்த்தும் போராடினார். அதிலே, தாம் தனித்து நிற்க
நேர்ந்தும் சளைத்து விடவில்லை சாஸ்திரியார்.
வடமொழியைத் 'தேவ மொழி' என்றனர் அம்மொழியிடத்துப் பற்று
டையோர். அவர்களோடு போட்டியிடுவார் போல, தமிழ் மொழியையும் 'தேவ
மொழி' யென்றனர், தமிழ்ப் புலவர்களிலே சிலர். மூடநம்பிக்கைகளைச் சாடிப்
பாடிய பாரதியாரும், "ஆதிசிவன் பெற்றுவிட்டான்"என்று தமிழுக்குத் தெய்வத்
தன்மை கற்பித்துப் பாடினார். சாஸ்திரியாரோ , இந்த மூட நம்பிக்கையை
மறுத்தார். வெறுத்தார், எதிர்த்தார். இதோ சான்று: