பக்கம் எண் :

242என் சரித்திரம்

அத்தியாயம்- 40

பட்டீச்சுரத்திற் கேட்ட பாடம்

ஒரு புலவருடைய பெருமையை ஆயிரக்கணக்கான பாடல்களால்
அறிந்து கொள்ளவேண்டுமென்பதில்லை. உண்மைக்கவித்துவம் என்பது ஒரு
பாட்டிலும் பிரகாசிக்கும்; ஓர் அடியிலும் புலப்படும். பதினாயிரக் கணக்காக
ரசமில்லாத பாடல்களை இயற்றிக் குவிப்பதை விடச் சில பாடல் செய்தாலும்
பிழையில்லாமல் சுவை நிரம்பியனவாகச் செய்வதே மேலானது.

“சத்திமுற்றப் புலவர் என்பவரைப் பற்றித் தமிழ் படித்தவர்களிற்
பெரும்பாலோர் அறிவார்கள். அப்புலவர் இயற்றிய அகவல் ஒன்று அவரது
புகழுக்கு முக்கியமான காரணம். ‘நாராய் நாராய் செங்கால் நாராய்’ என்று
தொடங்கும் பாட்டு ஒன்றே அவரிடத்தில் இயல்பாக உள்ள கவித்துவத்தைத்
தெளிவாக வெளியிடுகிறது. பனங்கிழங்கு பிளந்தாற் போன்ற கூரிய
வாயையுடைய நாரையே என்று நாரையை அவர் அழைக்கிறார். இந்த உவமை
பாண்டிய மன்னனது உள்ளத்தைக் கவர்ந்ததாம். ஆடையின்றி வாடையினால்
மெலிந்து கையினார் உடம்பைப் பொத்திக் கொண்டு கிடக்கும் தம் நிலையை
அந்த வித்துவான் எவ்வளவு அழகாக வர்ணித்திருக்கிறார். தாம் படுகின்ற
கஷ்டம் அவருக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. தம் மனைவி தமது வீட்டிற்
படும் துன்பங்களை நினைந்து வாடுகிறார். அந்த அருமையான பாடலை
இயற்றினவர் இந்த ஊரிலேதான் வாழ்ந்து வந்தார்” என்று என் ஆசிரியர்
பட்டீச்சுரத்தை அடைந்தவுடன் கூறினார்.

சத்திமுற்றம்

“இது பட்டீச்சுரமல்லவோ?” என்று நான் கேட்டேன்.

“ஆம்; அதோ தெரிகிறதே அதுதான் சத்திமுற்றம் கோயில்;
பட்டீச்சுரமும் சத்தி முற்றமும் நெருங்கியிருக்கின்றன. பட்டீச்சுரத்தின் வடக்கு
வீதியே சத்திமுற்றத்தின் தெற்கு வீதியாக இருக்கிறது.”

“அந்தப் புலவருடைய பரம்பரையினர் இப்போது இருக்கிறார்களா?”

“இருக்கிறார்கள். ஒருவர் தமிழறிவுள்ளவராக இருக்கிறார். அவரை நீரும்
பார்க்கலாம்.”