பக்கம் எண் :

குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும் 271

Untitled Document
ஒருவனாகச் செய்துவிடக் கூடியது அல்ல. ஆகவே, என் காரியத்தை
நான்              பார்த்துக் கொள்ளுவதோடு    திருப்தியடைய
வேண்டியவனானேன்.     மற்றவர்கள்,   துர்நாற்றத்தைக் குறித்தோ,
அசுத்தத்தைப்       பற்றியோ            கவலைப் பட்டதாகவே
தெரியவில்லை.

     அதோடு போகவில்லை. சில பிரதிநிதிகள்,    தாங்கள் இருந்த
அறைகளுக்கு வெளிப்புறமிருந்த தாழ்வாரத்தில் இரவு     நேரத்தில்
கொஞ்சமும்         கவலைப்படாமல் மலஜலம் கழித்து வந்தார்கள்.
காலையில் இந்த இடங்களைத்  தொண்டர்களுக்குக்  காண்பித்தேன்.
சுத்தம் செய்யும் வேலையை மேற்கொள்ள யாரும்  தயாராக இல்லை.
அதைச் செய்யும் கௌரவத்தில் என்னுடன்    பங்குகொள்ள யாரும்
கிடைக்கவில்லை.        நிலைமை இப்பொழுது அதிக அபிவிருத்தி
அடைந்திருக்கிறது. ஆனால், தங்கள்    இஷ்டப்படியெல்லாம் கண்ட
கண்ட இடங்களில் மலஜலம் கழித்து        ஆபாசப்படுத்தி விடும்
யோசனையற்ற பிரதிநிதிகள் இன்றும்   கூட இல்லாது போகவில்லை.
அவர்கள் அவ்விதம்     செய்துவிட்ட இடங்களை  உடனே சுத்தம்
செய்துவிட                  எல்லாத் தொண்டர்களும்  தயாராக
முன்வந்துவிடுவதுமில்லை.

     காங்கிரஸ் மகாநாடு மேலும்      சில நாட்கள் நீடித்து நடக்க
வேண்டி வந்தால், அங்கே       தொத்து நோய் உண்டாவதற்குரிய
நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதையும் கண்டேன்.

14. குமாஸ்தா வேலையும் பணியாள் வேலையும்

     காங்கிரஸ் மகாநாடு ஆரம்பமாவதற்கு       இன்னும் இரண்டு
நாட்கள் இருந்தன. கொஞ்சம்  அனுபவம் பெறுவதற்காகக் காங்கிரஸ்
காரியாலயத்திற்கு என் சேவையை அளிப்பது என்று  முடிவு செய்து
கொண்டேன்.       கல்கத்தாவுக்கு வந்து,   அன்றாடக் கடன்களை
முடித்துக்கொண்டதும், நேரே         காங்கிரஸ் காரியாலயத்திற்குச்
சென்றேன்.

     பாபு பூபேந்திரநாதவசுவும்,     ஸ்ரீ கோஷாலும் காரியதரிசிகள்.
பூபேன் பாபுவிடம் சென்று, நான் தொண்டு செய்ய    விரும்புவதாகச்
சொன்னேன். அவர் என்னை     உற்றுப்பார்த்துவிட்டு,   “உமக்குக்
கொடுப்பதற்கு என்னிடம் வேலை இல்லை.     கோஷால் பாபுவிடம்
ஏதாவது வேலை இருக்கக் கூடும்.   தயவு செய்து அவரைப் போய்ப்
பாரும்” என்றார்.

     ஆகவே, அவரிடம் போனேன். அவர் என்னை ஏற   இறங்கப்
பார்த்துவிட்டு, “உமக்குக் குமாஸ்தா வேலைதான் கொடுக்க   முடியும்.
அதை நீர் செய்வீரா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

     “நிச்சயம் செய்கிறேன்.        என் சக்திக்கு உட்பட்ட எந்தப்
பணியையும் இங்கே செய்வதற்காகவே வந்திருக்கிறேன்”   என்றேன்.