பக்கம் எண் :

காசியில்289

Untitled Document
கொஞ்சமும் பொருத்தம்        இல்லாததாக இருக்கிறது. மூன்றாவது
வகுப்புப் பிரயாணிகள்          ஆடுகளாகவே நடத்தப்படுகின்றனர்.
அவர்களுக்குள்ள வசதிகளும் ஆடுகளுக்கு  இருக்கும் வசதிகள்தான்.
ஐரோப்பாவில், நான்      மூன்றாம் வகுப்பிலேயே பிரயாணம் செய்து
வந்தேன். முதல் வகுப்புப் பிரயாணம்  எப்படி இருக்கிறது என்பதைப்
பார்க்க ஒரே ஒரு தடவை மாத்திரம்     முதல் வகுப்பில் பிரயாணம்
செய்தேன். ஆனால், முதல் வகுப்புக்கும்      மூன்றாம் வகுப்புக்கும்
இங்கே இருப்பதைப்போன்ற   பேதத்தை நான் அங்கே காணவில்லை.
தென்னாப்பிரிக்காவில் மூன்றாம்   வகுப்புப் பிரயாணிகள் அநேகமாக
நீக்ரோக்களே. ஆயினும், இங்கே இருப்பதை விட அங்கே  மூன்றாம்
வகுப்பு வசதிகள்    நன்றாக இருக்கின்றன.   தென்னாப்பிரிக்காவின்
சிலபகுதிகளில்         மூன்றாம் வகுப்பு வண்டிகளில், பிரயாணிகள்
தூங்குவதற்குரிய இட வசதியும்,      மெத்தை தைத்த ஆசனங்களும்
உண்டு. கூட்டம் அதிகமாகி,    இடநெருக்கடி ஏற்பட்டுவிடாத படியும்
பார்த்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் இங்கேயோ,  மூன்றாம் வகுப்பு
வண்டிகளில் குறிப்பிட்ட         தொகைக்கு அதிகமாகப் பிரயாணம்
செய்வதே வழக்கமாக இருந்து வருகிறது.

     மூன்றாம் வகுப்புப் பிரயாணிகளின்        சௌகரியங்களைக்
கவனிப்பதில் ரெயில்வே அதிகாரிகளுக்கு  இருந்து வரும் அசிரத்தை
ஒரு புறம்.         மற்றொரு புறத்தில், பிரயாணிகளின் ஆபாசமான,
யோசனையில்லாத பழக்கங்கள்.  இந்த இரண்டும் சேர்ந்து, சுத்தமான
பழக்க வழக்கமுள்ள     ஒருவருக்கு மூன்றாம் வகுப்பில் பிரயாணம்
செய்வதை         ஒரு சோதனையாக்கி விடுகின்றன. கூடஇருக்கும்
பிரயாணிகளின் சௌகரியம்,      சுகம் ஆகியவைகளைக் குறித்துக்
கொஞ்சமேனும் கவனிக்காமல்,வண்டிக்குள்ளேயே கண்டபடி எல்லாம்
குப்பையைப் போடுவது,          நினைத்தபோதெல்லாம் நினைத்த
இடத்திலெல்லாம் சுருட்டுப் பிடிப்பது, வெற்றிலை பாக்குப்  புகையிலை
போட்டு வண்டி முழுவதையும்   எச்சில் படிகமாக்கிவிடுவது, கூச்சல்
போட்டுப் பேசுவது, கத்துவது,   ஆபாசமாகப் பேசுவது போன்றவை
பிரயாணிகளிடம் பொதுவாக இருக்கும்    பழக்கங்களாகும். 1902-இல்
மூன்றாம் வகுப்பில் பிரயாணம் செய்தேன். 1915 முதல் 1919 வரையில்
இடைவிடாமல் மூன்றாம் வகுப்பில் சுற்றுப்பிரயாணம் செய்தேன். இந்த
இரு தடவைகளிலும்,      மூன்றாம் வகுப்புப் பிரயாணத்தில் எனக்கு
ஏற்பட்ட அனுபவத்தில்      எந்த விதமான வித்தியாசத்தையும் நான்
காணவில்லை.

     பயங்கரமான இந்த நிலைமையைச்   சீர்திருத்துவதற்கு எனக்கு
ஒரே ஒரு வழிதான் தோன்றுகிறது.          படித்தவர்கள், மூன்றாம்
வகுப்பில்தான் பிரயாணம் செய்வது    என்று முடிவு செய்துகொண்டு,
மக்களின் பழக்கங்களைச் சீர்திருத்துவதே      அந்த வழி. அதோடு
ரெயில்வே அதிகாரிகளை நிம்மதியாக இருக்க விடக்கூடாது.