பக்கம் எண் :

பசுப் பாதுகாப்புக்கு பதிலாகக் கிலாபத் 577

Untitled Document
மகாநாட்டில் இல்லை. ஆகையால்,   தாங்களே அனுசரிக்க முடியாத
ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுவதால்,      தீமையைத் தவிர வேறு
எதுவும் இராது என்பதைக்     கூட்டத்திலிருந்த அநேகர் உணர்ந்து
கொண்டனர்.

     “அந்நியத் துணியைப்       பகிஷ்கரிப்பது என்பது மாத்திரம்
நமக்குத் திருப்தி     அளித்துவிட முடியாது.   ஏனெனில், அந்நியத்
துணியை நாம் சரியானபடி  பகிஷ்கரிப்பதற்கு,  நமக்குத் தேவையான
சுதேசித் துணிகளை நாமே தயாரித்துக்கொள்ள     இவ்வளவு காலம்
பிடிக்கும் என்பதை        யாரால் சொல்ல முடியும்? பிரிட்டிஷாரை
உடனே பாதிக்கக்கூடிய ஏதாவது ஒன்று   நமக்கு வேண்டும். உங்கள்
அந்நியத் துணிப்          பகிஷ்காரம் வேண்டுமானால், அப்படியே
இருக்கட்டும். அதைப்பற்றி எங்களுக்குக்   கவலையில்லை. ஆனால்,
அதோடு அதைவிடத் துரிதமான, வேகமான ஒன்றையும் எங்களுக்குக்
கொடுங்கள்” என்று மௌலானா ஹஸரத் மோகானி பேசினார். அவர்
பேச்சை   நான் கேட்டுக்கொண்டிருந்தபோதே, அந்நியத் துணியைப்
பகிஷ்கரிப்பது என்பதற்கு மேலாக மற்றொரு        புதிய திட்டமும்
அவசியம் வேண்டும் என்பதை உணர்ந்தேன்.    அந்நியத் துணியை
உடனே பகிஷ்கரித்து விடுவது என்பது அச்சமயம்  அசாத்தியமானது
என்றும் எனக்குத் தோன்றியது. நான் விரும்பினால்,    நமது துணித்
தேவைக்குப்  போதுமான துணி முழுவதற்கும் வேண்டிய கதரை நாம்
உற்பத்தி செய்ய முடியும் என்பது எனக்கு   அப்பொழுது தெரியாது.
இதைப் பின்னால் தான் கண்டு பிடித்தேன். மேலும், அந்நியத் துணிப்
பகிஷ்காரத்திற்கு ஆலைகளை மாத்திரம் நம்பி இருப்போமாயின், நாம்
ஏமாற்றப்பட்டு விடுவோம் என்பதை அப்பொழுதே நான்  அறிவேன்.
மௌலானா தமது பிரசங்கத்தை    முடித்த சமயத்தில் நான் இன்னும்
இந்த மனக்குழப்பத்திலேயே இருந்துவந்தேன்.

     பேசுவதற்கு எனக்கு ஹிந்தி அல்லது    உருதுமொழியில் தக்க
சொற்கள் அகப்படாமல் இருந்தது,     பெரிய இடையூறாக இருந்தது.
முக்கியமாக வடநாட்டு முஸ்லிம்களைக்   கொண்ட ஒரு கூட்டத்தின்
முன்பு, விவாதங்களோடு கூடிய பிரசங்கத்தை நான் செய்ய நேர்ந்தது
இதுவே      முதல் தடவையாகும்.     கல்கத்தாவில் முஸ்லிம் லீக்
கூட்டத்தில் நான்    உருதுவில் பேசியிருக்கிறேன். ஆனால், அங்கே
பேசியது சில நிமிடங்களே. அதோடு    உணர்ச்சியோடு கூடிய ஒரு
கோரிக்கையை அங்கே கூடி        இருந்தோருக்கு வெளியிடுவதே
அப்பேச்சின் நோக்கம். அதற்கு    நேர்மாறாக இங்கே, விரோதமான
கூட்டத்தினரல்லவாயினும் குற்றங்குறை கண்டுபிடிக்கக்கூடியதான ஒரு
கூட்டத்தைச்     சமாளிக்க வேண்டியிருந்தது.   அவர்களுக்கு என்
கருத்தை விளக்கிக் கூறி அவர்களை   ஒப்புக்கொள்ளும்படி செய்ய
வேண்டியும் இருந்தது.