பக்கம் எண் :

118தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

குலோத்துங்க சோழன் காலத்தில் இக்கோவிலின் சில
பகுதிகள் எழுத்தன.

ஐராவதேஸ்வரர் கோவில் பிற்காலச் சோழர் காலச்
சிற்பக் கலைத்திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இக்கோவிலின்
விமானம் தஞ்சையிலும், கங்கை கொண்ட சோழபுரத்திலும்
உள்ள கோவில்களைப்போல் பிரம்மாண்டமான அமைப்பைக்
கொண்டுள்ளது. இக்கோவில் முழுவதும் கல்லாலானது.
கருவறைச் சுவர்ச் சிற்பங்கள், மகாமண்டபச் சுவரிலுள்ள
சிற்பங்கள், இதர தூண் சிற்பங்கள் யாவும் கலையழகு
படைத்தவை. ‘இராஜகம்பீரன் மண்டபத்திலுள்ள’ கல் தேரின்
சக்கரங்கள், அவற்றின் ஆரங்கள், மையக்குடம் ஆகியவை
இயற்கையான தோற்றத்தையும் நுட்பமான
வேலைப்பாட்டினையும் கொண்டுள்ளன. வாயிலருகில் உள்ள
பலிபீடத்தில் உள்ள சிற்பங்கள் அழகு வாய்ந்தவை.

இக்கோவிலின் அம்மன் தேவநாயகி எனப்படுகிறார்.

இரண்டாம் இராஜராஜன் சாளுக்கியரின் கல்யாணிநகர்மீது
படையெடுத்து வெற்றி பெற்றார். தமது பரிசாக அங்கிருந்து
சாளுக்கிய துவாரபாலர் சிலையைத் தாராசுரம் கோவிலுக்குக்
கொண்டு வந்தார். துவாரபாலர் சிற்பமும் இதர சில
சிற்பங்களும் தற்பொழுது தஞ்சாவூர் சரஸ்வதி
மாளிகையிலுள்ள கலைக்கூடத்தில் உள்ளன. ஐராவதேஸ்வரர்
கோவிலில் காணப்படும் சில சிற்பங்கள் கல்யாணிச் சாளுக்கியர்
கலையின் அம்சங்களைக் கொண்டுள்ளன.

இக்கோவிலின் சுற்று மண்டபத் தாழ்வரைகளில் புகழ்பெற்ற
பரத நாட்டிய முத்திரைகளின்
சிற்பங்கள் பொலிவுடன்
செதுக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் முக்கிய மண்டபத்தைச்
சுற்றிப் பெரிய புராணக் கதைகள் கல்லில் வடிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தொல்பொருள் துறையினர் நடத்தும் காட்சிக்
கூடம் இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் உள்ளது.