பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்119

தமிழகச் சிற்பக் கலை மேன்மைக்கு ஒரு தலைசிறந்த
எடுத்துக்காட்டாகத் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோவில்
விளங்குகிறது.

தாராசுரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் சக்தி முற்றம்
என்ற புகழ்மிக்க சிவாலயம் உள்ளது. இக்கோவிலின் இறைவன்
சிவக்கொழுந்தீஸ்வரர் ஆவார். இறைவி பெரியநாயகி
எனப்படுகிறார். சக்தி இவ்வூரில் சிவனுக்காகத் தவம்
இருந்ததாகப் புராணம் கூறும்.

திருப்புவனம்

கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் திருப்புவனம்
என்ற இடம் உள்ளது. இங்கு தருமபுர ஆதீனத்தாரின்
நிர்வாகத்திலுள்ள ஒரு சிறந்த சிவாலயம் உள்ளது. இது
கம்பஹரே ஸ்வர சுவாமி ஆலயம்
எனப்படுகிறது. தஞ்சையை
ஆண்ட பிற்காலச் சோழ மன்னனான மூன்றாம் குலோத்துங்கன்
(1178-1218) இவ்வாலயத்தை விரிவாகக் கட்டினார். இம்மன்னன்
பாண்டி நாடு, ஈழ நாடு, கொங்கு நாடு
ஆகிய மூன்று
நாடுகளுடனும் போர் நிகழ்த்தி வெற்றி பெற்ற சிறப்பின்
அறிகுறியாகத் ‘திரிபுவன வீரத் தேவன்’ என்ற சிறப்புப்
பெயர் பெற்றார். திரிபுவன வீரத் தேவனால் அமைக்கப்பெற்ற
‘திரிபுவன வீர புரம்’ என்பதே இந்நாளில் ‘திருப்புவனம்’
என அழைக்கப்படுகிறது என்பர்.

திருப்புவன ஆலயத்திலுள்ள இறைவன்
கம்பஹரேஸ்வரர்
எனப்படுகிறார். கம்பஹரேசுவரர் என்றால்
நடுக்கம் தீர்த்த நாயகர்
எனப் பொருள்படும். பாண்டிய
மன்னன் வரகுணனுக்கு (792-835) ஏற்பட்ட நடுக்கத்தைத்
தீர்த்துச் சிவபெருமான் அருள் புரிந்தார் என்று ஒரு கதை
உள்ளது.

இவ்வாலயத்திலுள்ள ஒரு கல்வெட்டிலிருந்து மூன்றாம்
குலோத்துங்கன் வடநாட்டில் பெருவெற்றி அடைந்தமையும்,
அங்குக் கிடைத்த பெரும் பொருளைக்கொண்டு இவ்வாலயத்தைக்
கட்டினார் என்றும் அறியப்படுகிறது.