பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்137

இறைபணியினால் இந்து சமய வழிபாட்டு முறைகள் வளமும்
வலிவும் பெற்றன. நுண்கலைகள் ஏற்றம் பெற்றன.

பிற்காலத் திருப்பணிகள்

இராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெருங்கோவிலில்
பிற்காலத் தஞ்சை வரலாற்றில் இடம் பெற்றுள்ள மன்னர்களும்
திருப்பணியாற்றியுள்ளனர்.

1. கருவறையின் முன்பகுதியிலுள்ள மிகப்பெரிய நந்தி
3.7 மீட்டர் உயரமும் 6 மீட்டர் நீளமும் 2.5 மீட்டர் அகலமும்
25 டன் எடையும் கொண்டுள்ளது. இது திருச்சி மாவட்டத்திலுள்ள
பச்சைமலையிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கருங்கல் பாறையைச்
செதுக்கி அமைக்கப்பட்டது என்பர். தஞ்சையை ஆண்ட நாயக்க
வம்சத்தின் முதல் மன்னர் செவப்பன் என்பவரால் இது
அமைக்கப்பட்டது.

2. கருவறையைச் சுற்றியுள்ள உண்ணாழியின் சுவர்களில்
சோழர்கால ஓவியங்கள்மீது தஞ்சையில் ஆட்சி புரிந்த நாயக்க
மன்னர்கள் காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. பல
இடங்களில் நாயக்கமன்னர் காலத்து ஓவியங்கள்
காணப்படுகின்றன.

3. கோவிலின் பிரகாரத்திலுள்ள ஆறுமுகச்சாமி
சந்நிதி
நாயக்க மன்னர்களால் கி.பி. 17ஆம் நூற்றாண்டில்
கட்டப்பட்டதாகும். இக்கோவிலின் சிற்ப வேலைப்பாடு
போற்றத்தக்கதாக உள்ளது.

4. உலகமுழுதுடையாள் என்ற அம்மனின் சந்நிதி
கி.பி. 13ஆம் நூற்றாண்டில் கோனேரின்மை கொண்டான்
என்ற பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டிருக்கும்
என்று கருதப்படுகிறது.

5. மகாகணபதி ஆலயம், தஞ்சை மராட்டிய மன்னர்
இரண்டாம் சரபோஜியால் கி.பி. 1803இல் முற்றிலும்
புதுப்பித்துக் கட்டப்பட்டது. இவர் தஞ்சைக் கோவிலின்
குடமுழுக்கு விழாவையும் நடத்தினார்.

6. வெளிப் பிரகாரத்திலுள்ள சிவலிங்கங்கள் தஞ்சை
மராட்டிய மன்னர் சரபோஜி காலத்தில் அமைக்கப்பட்டன.