பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்139

கோவில்களின் சந்நிதிமுன் காணப்படுவது குறிப்படத்தக்க
ஒன்றாகும்.

தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட
கோவில்களுக்குப் பரம்பரை அறங்காவலராக இருப்பவர்
இராஜா ராம ராஜா ஆவார். இவர் தஞ்சை சரபோஜி மன்னர்
வழிவந்தவர் ஆவார்.

கிறித்தவ ஆலயங்கள்

திரு இருதயப் பேராலயம் தஞ்சை நகரிலுள்ள முக்கியக்
கத்தோலிக்கக் கிறித்தவ ஆலயமாகும். இவ்வாலயம்
கி.பி. 1867இல் தோற்றுவிக்கப்பட்டது. இங்குள்ள இயேசுவின்
திரு இருதய சுரூபம் ஆஸ்திரியாவின் டிரால் நகரிலிருந்து
கொண்டு வரப்பட்டதாகும். 1967-69ஆம் ஆண்டில்
இவ்வாலயம் விரிவுபடுத்திக் கட்டப்பட்டது. திரு. இருதயப்
பேராலயத்தின் அருகில் பழமைமிக்க புனித வியாகுல மாதா
கோவில் உள்ளது. புனித லூர்து அன்னை ஆலயம், புனித
அருளானந்தர் ஆலயம், புனித அந்தோணியார் ஆலயம்
ஆகியவை இந்நகரிலுள்ள இதர கத்தோலிக்க ஆலயங்களாகும்.

தஞ்சைக் கோட்டையினுள் சிவகங்கைப் பூங்கா அருகில்
கிறிஸ்து ஆலயம்
உள்ளது. இது தென்னிந்தியத்
திருச்சபையினருக்குரியதாகும். சுவாட்ஸ் என்ற புகழ்மிக்க
கிறித்தவப் பெரியாரால் இவ்வாலயம் கி.பி. 1779இல்
கட்டப்பட்டது. கிறிஸ்டியன் பிரடெரிக் சுவாட்ஸ் பிரஷ்யா
நாட்டில் சோனன்பர்க்கில் கி.பி. 1276இல் பிறந்தார். டென்மார்க்
நாட்டின் கிறித்தவ இயக்கத்திற்காகச் சீர்திருத்த கிறித்தவ சமயப்
பணியாற்றினார். கி.பி. 1750இல் கடலூரில் வந்து இறங்கிய
இப்பெரியார் தரங்கம்பாடியில் 16 ஆண்டுகள் சமயப்
பணியாற்றினார். 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தஞ்சாவூரிலும்
திருச்சியிலும் சமயப் பணியாற்றினார். தஞ்சை மன்னர்
இரண்டாம் சரபோஜியை வளர்த்து அவருக்குக் குருவாகவும்
தந்தையாகவும் இருந்தார். 1788 முதல் தஞ்சாவூரில் தங்கி வாழ்ந்தார்.
தமிழ், மராத்தி ஆகிய மொழிகளைக் கற்றார்.