‘தஞ்சை சுவிசேடக் கவிராயர்’ வேத நாயக சாஸ்திரியார்
அவர்களுக்கும் சுவாட்ஸ் குருவாக இருந்தார், சரபோஜி மன்னர்
அரசுரிமை பெற இப்பெரியார் துணை நின்றார். இவர்
13-2-1798இல் தஞ்சையில் காலமானார். இவரது உடல் புனித
பீட்டர் ஆலயப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. சுவாட்ஸ்
பெரியாரின் நினைவாக சரபோஜி மன்னர் லண்டன் சிற்பி
ஒருவரால் செய்யப்பட்ட பளிங்குச் சின்னத்தை கிறிஸ்து
ஆலயத்தின் மேல்புறச் சுவரில் பதித்தார். இப்பளிங்குச்
சிற்பத்தில் மரணமாகும் நிலையில் உள்ள சுவாட்ஸ் பெரியாரின்
ஆசியை சரபோஜி மன்னர் பெறுவது போன்ற காட்சியும்
அதனடியில், அப்பெரியாரை மன்னர் புகழ்ந்து கூறிய
வாசகமும் உள்ளன.
தஞ்சை நகரில் மானம்பூச்சாவடியில்
புனித பீட்டர்
ஆலயம் உள்ளது. இதுவும் தென்னிந்தியத்
திருச்சபையினருக்குரியதாகும், சுவாட்ஸ் பெரியார் இவ்வாலயத்தை
முதலில் உருவாக்கினார். 1874இல் கட்டப்பட்ட ஆலயம்,
மதிப்பிற்குரிய பிளேக் என்பவரால் கி.பி. 1900இல் புதுப்பித்து
விரிவாகக் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் பகுதியில் சுவாட்ஸ்
பெரியார் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் சரபோஜி மன்னர்
அவரைப் புகழ்ந்து வெளியிட்ட பதிப்புக் கல்வெட்டு
உள்ளது.
இவ்வாலயத்திற்கு எதிரில் வேதநாயக சாஸ்திரியார்(1774-1864)
வாழ்ந்த இல்லம் உள்ளது. பாளையங்கோட்டையில் பிறந்த
சாஸ்திரியாரை ஒரு சமயம் அவ்வூரில் சுவாட்ஸ் பாதிரியார்
கண்டு, அவரைத் தஞ்சைக்கு அழைத்து வந்தார் (கி.பி. 1785).
சரபோஜி மன்னருடன் இவரையும் தம் இல்லத்தில் வளர்த்து
இருவருக்கும் குருவாக விளங்கினார். வேதநாயக சாஸ்திரியார்
சரபோஜி மன்னரின் நெருங்கிய நண்பராக வாழ்ந்தார்.
கிறிஸ்தவக் கவிதைகள் பாடுவதில் வல்லவராக இருந்தார்.
தஞ்சை அரண்மனைப் புலவராக விளங்கினார். புனித பீட்டர்
ஆலயம் எதிரில் இவர் வாழ்ந்த இல்லம் சரபோஜி மன்னரால்
இவருக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்டதாகும். சாஸ்திரியார்
வாழ்ந்த இல்லம் இன்றும் தஞ்சையில் ஒரு சிறந்த
சின்னமாக
விளங்குகிறது.
|