பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்141

தஞ்சைக் கோட்டை

கி.பி. 1532இல் தஞ்சையில் செவப்பர் என்பவர் நாயக்க
மன்னர்கள் ஆட்சியைத் தோற்றுவித்தார். கி.பி. 1673 வரை
தஞ்சை நாயக்க அரசு நிலைபெற்றிருந்துது. தஞ்சை நாயக்க
வம்சத்தின் கடைசி மன்னர் விஜயராகவன் ஆவார். தஞ்சை
நாயக்க மன்னர்களால் தஞ்சை நகரில் பலமிக்க கோட்டை
எழுப்பப்பட்டது. தஞ்சைக் கோட்டை சிறிய கோட்டை, பெரிய
கோட்டை என இரு பகுதிகளைக் கொண்டதாகும். சிறிய
கோட்டை, பெரிய கோட்டைக்குத் தென்மேற்கில் அமைந்துள்ளது.
பெரிய கோட்டையைவிட இது காலத்தால் முந்தியதாகும். சிறிய
கோட்டை தஞ்சைப் பிரகதீஸ்வரர் ஆலயத்தைச் சுற்றி இன்னும்
நல்ல நிலையில் காணப்படுகிறது. கோட்டையின் வடபுறம்
கிறிஸ்து ஆலயமும், சிவகங்கைத் தோட்டமும், குளமும்
உள்ளன. தஞ்சை மக்களின் நலனுக்காகச் சிறிய கோட்டையிலுள்ள
சிவகங்கைத் தோட்டம் 1871-72ஆம் ஆண்டில், தஞ்சை
நகராட்சியினரால் பூங்காவாக அமைக்கப்பட்டது. பலவகைப்
பறவைகளையும், விலங்குகளையும் பாதுகாக்கப்பட்ட நிலையில்
இப்பூங்கா கொண்டுள்ளது. சிவகங்கைப் பூங்காவிற்குத் தெற்கில்
பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சிறிய கோட்டையை
அடுத்து, தஞ்சை நகரைச் சுற்றிப் பெரிய கோட்டை அமைந்துள்ளது.
பெரிய கோட்டையின் வடக்கு, மேற்கு, வடகிழக்குப் பகுதியில்
கோட்டையின் எஞ்சிய பகுதிகளையும், அகழியையும் இன்றும்
காணலாம். பெரிய கோட்டையின் தெற்குப்பகுதி முற்றிலும்
அழிவுற்று அகழியும் நிரப்பப்பட்டுள்ளது. தஞ்சைக் கோட்டையின்
எஞ்சிய பகுதிகளைக் காப்பது நமது கடமையாகும்.

தஞ்சை அரண்மனை

தஞ்சை நகரின் மத்தியில் வரலாற்றுச் சிறப்புமிக்க
அரண்மனை உள்ளது. தஞ்சையைத் தலைநகராகக்கொண்டு
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களாலும், மராத்திய
மன்னர்களாலும் இவ்வரண்மனை கட்டப்பட்டது. அரண்மனையின்
எஞ்சிய பகுதிகளில் மராத்தியரது ‘தர்பார்’ மன்றம் ஒன்றாகும்.
இது ஷாஜி என்ற தஞ்சை மராத்திய மன்னரால்
கட்டப்பட்டதாகும்.