வந்தோரும் கருவறைத் தெய்வத்தைப் பூசித்து வந்தனர்.
சேரமான் பெருமாள் என்ற சேர மன்னர் (கி.பி. 9ஆம்
நூற்றாண்டு) இம்மலைக் கோவிலின் ஆதிப்பகுதியை எழுப்பினார்
என்பர். கருவறையின் வடபக்கச் சுவரில் குதிரையுடன் காணும்
சிறிய புடைப்புச் சிற்பம் சேரமன்னருடையது என்று கூறுவர்.
அடிவாரத்திலுள்ள பாதவிநாயகர் கோவிலைக் கடந்து
மலைப்படிகளில் சிறிது தூரம் வந்தபின் 18ஆம் படிக்கு
அருகிலுள்ள சிற்றாலயம் விநாயகருடையதாகும். இதைச்
சேரமான் பெருமாள் கட்டினார் என்று கூறப்படுகிறது. இவ்
விநாயகர் ‘சேரவிநாயகர்’ எனப்படுகிறார். சேரவிநாயகர்
சந்நிதியின் வாயிலிலுள்ள ஓரு தனிக் கற்சிலையில் காணப்படும்
உருவம், மலைக்கோவில் கருவறையின் வடக்குச் சுவரிலுள்ளது
போல் உள்ளது. இதுவும் சேரமன்னரின் உருவம் எனப்படுகிறது.
சேரமன்னர்கள் சூட்டிக்கொண்ட ‘கோதை’ என்ற பெயரின்
எச்சமாகப் பழனிக்கருகிலுள்ள கோதை மங்கலம் என்னும் கிராமம்
உள்ளது எனப்படுகிறது. பாண்டிய மன்னர்கள், கொங்குச்
சோழர்கள் ஆகியோரின் திருப்பணிகளைப் பழனிக் கோவில்
கொண்டுள்ளது. இன்றைய மலைக்கோவிலின் கருவறைப் பகுதிகள்
‘அவனி வேந்தராமன்’ எனப்படும் ஜடாவர்மன் சுந்தர
பாண்டியனின் (1251-68) திருப்பணியாகும் என்று கருதப்படுகிறது.
சுப்பிரமணிய விநாயகர் சந்நிதி அருகிலுள்ள நாயக்கர் மண்டபம்
இரண்டாம் பிரகாரத்திலுள்ள பாரவேல் மண்டபம் ஆகியவை
நாயக்கர் காலத் திருப்பணிகளாகும். கி.பி. 1634இல் மதுரை
நாயக்க மன்னர் திருமலையின் தளவாய் இராமப்பய்யன்
பழனிக்குச் சுவாமி வழிபாட்டிற்கு வந்தபொழுது தீர்த்தப்
பிரசாதம் கொடுக்கக் கோவிலில் அந்தணர்கள் இல்லாததால்,
அவர்களைத் தருவித்து அவர்களையே புதிய பூசாரிகளாக
நியமித்தார் என்றும், அதுவரை இருந்து வந்த தமிழ் மரபுப்
பூசாரிகளை இறை பணியிலிருந்து நீக்கினார் என்றும் ஒரு
செப்புப் பட்டயத்திலிருந்து அறியப்படுகிறது.அடிவாரத்தில் பாதவிநாயகர் சந்நிதிக்கு வடமேற்கிலுள்ள
மீனாட்சியம்மன் கோவில் பழனிப்பகுதி பாளையக்காரர்களால்
|