பக்கம் எண் :

236தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கூடலழகர் பெருமாள் கோவில்

மதுரை நகரின் முக்கிய வைணவ வழிபாட்டுத் தலம்
கூடலழகர் பெருமாள் கோவிலாகும். இது கி.பி. 15, 16-ஆம்
நூற்றாண்டில் விஜயநகர அரசு காலத்தில் கட்டப்பட்டது
எனப்படுகிறது. இக்கோவிலிலுள்ள அஷ்டாங்க விமானம்
தனிச்சிறப்பு வாய்ந்தது. அடித்தளத்தில் மூலவரான கூடலழகர்
வீற்றிருந்த திருக்கோலத்திலும், இரண்டாவது தளத்தில் பெருமாள்
சூரிய நாராயணனாக நின்ற கோலத்திலும், மூன்றாவது தளத்தில்
பெருமாள் க்ஷீராப்தி நாதனாகப் பள்ளி கொண்ட கோலத்திலும்
காட்சி தருகிறார். ஒரே கோவிலில் மூன்று கருவறைகளை,
ஒன்றன்மேல் ஒன்றாகக்கொண்டு மூன்று திருக்கோலங்களில்
பெருமாள் காணப்படுவது சிறப்பான ஒன்றாகும். இதுபோன்ற
விமான அமைப்பு தமிழ்நாட்டில் திருக்கோஷ்டியூர், உத்திரமேரூர்,
காஞ்சிபுரம் ஆகிய இடங்களிலுள்ள வைணவ ஆலயங்களில்
உள்ளன. இந்த அஷ்டாங்க விமானம் ஓர் அரிய
கலைப்படைப்பாகும். விமானத்தின் சுவர்களில் காணப்படும்
சாளரங்கள்
மற்றும் இதர சிற்பப் படைப்புகள் போற்றத்தக்கவை.
மதுரவல்லித் தாயாரின் சந்நிதியிலுள்ள கற்றூண்களும்,
இசைத்தூண்களும் வேலைப்பாடு மிக்கவை.

மதனகோபால சுவாமி கோவில், இம்மையில் நன்மை
தருவார் கோவில், பழைய சொக்கநாதர் கோவில், செல்லத்தம்மன்
கோவில், திருவாப்புடையார் கோவில், தெற்குக் கிருஷ்ணன்
கோவில், வடக்குக் கிருஷ்ணன் கோவில், மாரியம்மன் கோவில்
ஆகிய பல முக்கிய கோவில்களும் மதுரையில் உள்ளன.

மதனகோபால சுவாமி கோவிலிலுள்ள கற்றூண்கள் சில
அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு
பிலடெல்பியா நகர் காட்சிக்கூடத்தில் ஒரு மண்டபமாக அமைக்கப்பட்டுள்
ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மாரியம்மன் கோவிலின் எதிரிலுள்ள தெப்பக்குளம்
திருமலை மன்னரால் கி.பி. 1645இல் உருவாக்கப்பட்டதாகும்.
இது தமிழ்நாட்டிலேயே மிகப் பெரியதாகும்.