பக்கம் எண் :

246தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கற்றூண்களையும் இதர பல தெய்வங்களின் திரு
உருவங்களையும் காணலாம்.

திருப்பரங்குன்றத்தின் உச்சியில் காசி விஸ்வநாதர்
கோவில்
உள்ளது. இதனருகில் சிக்கந்தர் என்ற இஸ்லாமியப்
பெரியார் அடக்கம் செய்யப்பட்டு எழுப்பப்பட்ட தர்கா
உள்ளது.

திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்)
உமை ஆண்டார் குகைக் கோவில்
உள்ளது. இக்கோவில்
மதுரைப் பாண்டிய மன்னர் காலப் பணியாகும். கி.பி. 8ஆம்
நூற்றாண்டிற்குரியது எனப்படுகிறது. இக்குகைக் கோவில்
சிவனுக்காக வடிக்கப்பட்டதாகும். மலையில் குடையப்பட்ட
ஒரு மண்டபத்தையும், அதன் மேற்கில் ஒரு சிறு அறையையும்
இக்கோவில் கொண்டுள்ளது. குகையின் மேற்புறமுள்ள
அறையில் ‘அர்த்தநாரீஸ்வரரின்’ புடைப்புச் சிற்பம் உள்ளது.
மண்டபத்தின் பாறைச் சுவர்களில் தெற்கில் பார்த்தவண்ணம்
அழகிய சிற்பங்கள் உள்ளன. இதன் நடுவில் நடராசரின்
திருஉருவம் இடுப்புக்குக்கீழ் அழிந்த நிலையில் உள்ளது.
உச்சிப்பகுதியில் கணபதி, ஆறுமுகன் ஆகியோரின் திரு
உருவங்கள் உள்ளன. நடராசரின் திரு உருவத்திற்குக்
கிழக்கில், சுப்ரமணியர் தேவயானையுடன் காட்சி தரும்
சிற்ப உருவம் உள்ளது. மண்டபத்தின் மேற்கு நோக்கிய
பாறைச்சுவரில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்(1216-1238)
காலத்துக் கல்வெட்டு உள்ளது. குகையின் வெளிப்புறப் பாறையில்
சில புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.

சமணர்களுக்கும் இந்துக்களுக்கும் ஏற்பட்ட சமயப்
போராட்டத்தினால் இக்குகைக் கோவிலின் சிற்பங்கள்
சிதைவடைந்தன என்று கருதப்படுகிறது. இந்திய அரசின்
தொல்பொருள் துறையினர் பாதுகாப்பில் இக்குகைக் கோவில்
உள்ளது.

மலையின் வடமேற்குப் பகுதியில் (இருப்புப்பாதை
நிலையம் அருகில்) சமணர் கற்படுகைகள் உள்ள ஒரு
குகை உள்ளது.