|
நரசிங்கம்
மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில்
நரசிங்கம் உள்ளது.
இக்கிராமத்தின் அருகில், ஆனைமலையின் வட பகுதி
அடிவாரத்தில், யோக நரசிங்கப் பெருமாள்
கோவில் உள்ளது.
இது ஒரு குடைவரைக் கோவில் ஆகும். இக்கோவில் மதுரைப்
பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (கி.பி. 8ஆம் நூற்றாண்டு)
காலத்தில் அவரது அமைச்சரான மதுரகவி என்ற மாறங்காரி
என்பவரால் கி.பி. 770இல் உருவாக்கப்பட்டது. மாறங்காரியின்
சகோதரர் மாறன் எயிணன் இக்கோவிலுக்கு ஒரு
முகமண்டபத்தைக் கட்டினார். கருவறையிலுள்ள நரசிங்கப்
பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக்
குடைந்து அமைக்கப்பட்டதாகும். (வைணவ வழிபாட்டில்
சிங்கமுகத்தைக் கொண்ட விஷ்ணுவை நரசிம்மர் என அழைப்பர்).
குகைக் கோயில் முன்பாக ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின்
கட்டுமான கற்கோவில் உள்ளது.
யோகநரசிங்கப் பெருமாள் கோவிலுக்குச் சிறிது மேற்கில்,
மற்றொரு குடைவரைக் கோவில் உள்ளது. இது முருகன் உறை
கோவில் அல்லது லாடன் கோவில் எனப்படும். இக்கோவில்
மதுரைப் பாண்டிய மன்னர் காலக் கோயிற் கலைப்பணியாகும்.
கி.பி. 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. கருவறையில் முருகப்
பெருமானும் அவரது தேவி தேவசேனாவும் காட்சி
தருகின்றனர்.
லாடன் கோவிலுக்கு மேற்கில், ஆனைமலையில்
சமணச்
சிற்பங்கள் உள்ள பகுதி உள்ளது.
திருமோகூர்
மதுரையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் (நரசிங்கத்திலிருந்து
6 கி.மீ) திருமோகூர் உள்ளது. இங்கு காளமேகப் பெருமாள்
கோவில் உள்ளது. இக்கோவிலிலுள்ள பல மண்டபங்கள்
சிவகங்கைச் சீமையை ஆட்சிபுரிந்த மருது
சகோதரர்களின்
திருப்பணியாகும். தமிழ் மக்களின் சிற்ப, கட்டடத் திறனுக்கு
ஒர் எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு சிறந்த
வைணவத்
தலமாக இக்கோவில் விளங்குகிறது.
|