பக்கம் எண் :

252தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

திருவாதவூரில், மாணிக்கவாசகர் பிறந்த இடம் என்று கருதப்படும்
இடத்தில் மாணிக்கவாசகருக்காக ஒரு சிறு கோவில் உள்ளது.
கி.பி.1934இல் இது புதுப்பித்துக் கட்டப்பட்டது.

திருவாதவூரிலுள்ள திருமறை நாதர் கோவில் தொன்மை
மிக்க சிவ வழிபாட்டுத்தலம் ஆகும். இக்கோவிலின் நூற்றுக்கால்
மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்பர். இந்த
மண்டபத்தின் கொடுங்கைகள் சிற்பநுட்பம் வாய்ந்தவை.
மூலவரின் கருவறைச் சுவர்கள் சிற்ப வேலைப்பாடுமிக்கவை.
இங்கு அனுக்ஞை விநாயகர் சந்நிதி அருகிலுள்ள ஆறுகால்
மண்டபம்
‘கொடுங்கைகளுக்‘குப் புகழ் பெற்றதாகும்.
நடராசருக்கென அழகிய சந்நிதி உள்ளது. அம்மன் வேதநாயகி
எனப்படுகிறார். அம்மனின் சந்நிதியிலுள்ள கொடுங்கைகளும்
வேலைப்பாடுமிக்கவை.

திருப்புவனம்

மதுரை நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் (மதுரை-
இராமநாதபுரம் சாலையில்) திருப்புவனம் உள்ளது. இவ்வூரில்
புஸ்பவனேஸ்வரர் அல்லது பூவநாதர் என்ற புகழ்மிக்க
சிவனது கோவில் உள்ளது. இக்கோவில் தொன்மைமிக்க
ஒன்றாகும். இக்கோவிலும், ஊரும் வைகையாற்றின் தென்கரையில்
அமைந்துள்ளன. மதுரையைத் தலைநகராகக்கொண்டு ஆட்சிபுரிந்த
பாண்டிய மன்னர்கள், நாயக்க மன்னர்கள் ஆகியோரின்
திருப்பணிகளை இக்கோவில் கொண்டுள்ளது. அப்பர், சுந்தரர்,
சம்பந்தர் ஆகியோரின் பாடல்கள் பெற்ற தலம்.

இறைவன் சந்நிதியின் சுவர்களும், இறைவி சௌந்திர
நாயகி அம்மன்
சந்நிதியின் சுவர்களும் சிற்ப
வேலைப்பாடுமிக்கவை.

திருமலை மன்னரால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்
பெறாத இராயகோபுரம் இக்கோவிலின் முன்பாக உள்ளது.
கோவிலின் நுழைவாயில் அருகில் திருமலை மன்னரின்
ஆளுயரச் சிற்பமும், திருமலையின் அமைச்சர் சொக்கப்பர்,
பொன்னனையாள்
என்ற கோவிலில் நடனமாடும் பெண்
ஆகியோரது சிற்ப உருவங்களும் உள்ளன.