பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்253

தமிழ்மக்களின் பண்டைய சிற்ப, கட்டடக் கலைச் சிறப்புக்கு
ஓர் எடுத்துக்காட்டாகத் திருப்புவனம் புஸ்பவனேஸ்வரர் கோவில்
உள்ளது.

திருவேடகம்

மதுரையிலிருந்து 19 கி.மீ. தொலைவில் (மதுரை-
சோழவந்தான் சாலையில்) திருவேடகம் என்ற ஊர் உள்ளது.
இவ்வூரின் புகழுக்குக் காரணம் இங்குள்ள ஏடகநாத சுவாமி
கோவிலாகும். இது ஒரு சிறந்த சிவ வழிபாட்டுத்தலம் ஆகும்.
ஊரும் கோவிலும் வைகையாற்றின் கரையருகில் அமைந்துள்ளன.
சமணர்களை ‘அனல்வாதத்தில்’ வென்ற திருஞான சம்பந்தர்
(கி.பி. 7ஆம் நூற்றாண்டு). பின் ‘புனல்வாதத்தில்’ ஈடுபட்டார்.
இப்போட்டியில் சமணர்கள் ஒரு சுலோகத்தை எழுதி அதை
வைகை ஆற்றில் இட்டதாகவும், சமணரின் அவ்வேடு ஆற்றோடு
போய்விட்டதாகவும், ஆனால் திருஞான சம்பந்தர் இட்ட ஏடு
ஆற்றினை எதிர்த்துச்சென்று இன்றைய ஏடகப்பகுதியின்
(திருவேடகம்) கரையில் அணைந்ததாகவும் இதனைக் கண்ட
சமணர்கள் தோல்வியை ஒப்புக்கொண்ட தாகவும் கூறப்படுகிறது.
சமணரை வென்ற திருஞான சம்பந்தர் ஏடணைந்த திருவேடகத்தில்
சிவலிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டதாகவும், அதுவே இன்று
திருவேடகம் கோவிலில் காட்சிதரும் ஏடகநாதர் என்றும் கூறுவர்.

இறைவனின் கருவறைச் சுவர்களும், இறைவி ஏலவார்
குழலியம்மை
யின் கருவறைச் சுவர்களும் தற்காலச் சிற்பிகளின்
சிறந்த உளி வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன. அம்மன்
சந்நிதி முன்னுள்ள கற்றூண்களில் ஒன்றில் திருஞான சம்பந்தரின்
சிறிய உருவமும், மற்றொன்றில் சமணர் ஒருவரின் உருவமும்
உள்ளன. இக்கோவிலின் நுழைவாயிலிலுள்ள முற்றுப்பெறா
நிலையிலுள்ள ‘மொட்டைக் கோபுரம்’ விஜயநகர அரசுகாலப்
பணி என்று கூறப்படுகிறது. இந்நூற்றாண்டில், நாட்டுக்கோட்டை
நகரத்தார்கள் இக்கோவிலைச் சீரிய முறையில் புதுப்பித்துக்
கட்டியுள்ளனர்.