பக்கம் எண் :

268தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

காட்சிக் கூடம் - திருக்கோகர்ணக் கோவிலுக்கு அருகில்
தமிழ்நாடு அரசின் காட்சிக்கூடம் (Museum) ஒன்று உள்ளது.
1910ஆம் ஆண்டிலிருந்து இக்காட்சிக்கூடம் செயல்படுகிறது.
இக்காட்சிக்கூடம் அளவில் சிறிதாக இருப்பினும் சென்னை
அரசு காட்சிக்கூடத்தில் உள்ளதைப்போல் பல துறைகளிலிருந்தும்
சேகரிக்கப்பட்ட காட்சிப் பொருள்கள் இங்கு உள்ளன.
முதுமக்கள் தாழிகள், மண்கலங்கள்,
பாதுகாக்கப்பட்ட
பலவகைப் பறவைகள், விலங்குகள், சமணத் தீர்த்தங்கரர்கள்,
சிலைகள், இதர கற்சிலைகள், உலோகச் சிலைகள், ஆயுத
வகைகள், இயந்திரத் துப்பாக்கி, திருமயம் கோட்டையில்
உபயோகித்த பூட்டுகள், பீரங்கிக் குண்டு வகைகள், வெடித்த
பீரங்கிக் குண்டுகள், பீரங்கி, கொடும்பாளூர்ச் சிற்பங்கள்
சித்தன்னவாசல், கொடும்பாளூர்ச் சிற்ப மாதிரிகள் இன்னும் பல
அரிய பொருள்கள் காட்சிக்கூடத்தில் உள்ளன.

சித்தன்னவாசல்

புதுக்கோட்டை நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில்
சித்தன்னவாசல்
என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள மலையில்
சமணர் குகைக்கோவில்
ஒன்று உள்ளது. இக்குகைக் கோவிலின்
உள்ளே ஒரு சிறு அறையும் வெளியே ஒரு தாழ்வாரமும் உள்ளன.
குகைக்கோவிலின் சுவர்களில் சமணத் தீர்த்தங்கரர்களின்
சிற்பங்கள் உள்ளன. சித்தன்னவாசலும், இதனருகிலுள்ள
அன்னவாசலும்
பல நூற்றாண்டுகளாகச் சிறந்த சமண
மையங்களாக விளங்கின.

மதுரையைத் தலைநகராகக்கொண்டு அவனிய சேகர
ஸ்ரீவல்லப பாண்டியன்
(கி.பி. 815-862) ஆட்சி செய்தபொழுது
இளம் கௌதமன்
என்ற மதுரை ஆசிரியர், சித்தன்னவாசல்
குகைக்கோவிலைத் திருப்பணி செய்து, இங்கு உலகம் வியக்கும்
ஓவியங்களைத் தோற்றுவித்தார் என்று இக்குகைக் கோவிலிலுள்ள
கல்வெட்டுகள்மூலம் அறியப்படுகின்றன. இங்குள்ள சுவர்
ஓவியங்கள் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில்
உருவானவை என்ற கருத்தும் உள்ளது.