பக்கம் எண் :

284தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

கோவில் குடையப்பெற்றுள்ளது. இக்கோவில் சுமார் 1300
ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது.
மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற சுமார் 2 மீட்டர் உயரமுள்ள
கற்பகப் பிள்ளையாரின் திருஉருவம் வடக்குத் திசை நோக்கிக்
காணப்படுகிறது. பிள்ளையாரின் திருவுருவத்தை, மலையைக்
குடைந்து அமைக்கப்பட்ட லிங்கம் உள்ளது. இங்குள்ள
இறைவன் திருவீங்கைக்குடி மகாதேவர் (திருவீசர்)
எனப்படுகிறார். இதனருகில் கிழக்குத் திசையில் திருமருதங்குடி
நாயனார் (மருதீசர்) கற்றளி உள்ளது. நாட்டுக்கோட்டை
நகரத்தார்களின் அரிய திருப்பணிகளால் இக்கோவில்
பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. மலைப்பாறையைக் குடைந்து
கருவறை லிங்கத்தை அமைப்பது பாண்டியர் காலக்
குடைவரைக் கோவில்களில் பொதுவாகக் காணப்படுவதால்,
பிள்ளையார் பட்டி குடைவரைக் கோவில் பாண்டிய மன்னர்களின்
கோவிற் கலைப்பணியாகும் என்று கருதப்படுகிறது. கோவில்
கொண்டுள்ள பிள்ளையாரின் காரணமாக, இவ்வூர், பிள்ளையார்பட்டி
என்ற பெயரைப் பெற்றுள்ளது. ஈஸ்வரன் கோபுரவாயில்,
இக்கோபுரத்தின் அடிப்பகுதி, மருதீசர் சந்நிதி, மருதீசர் சந்நிதி
முன்னுள்ள கற்றூண்கள் யாவும் இக்காலச் சிற்பக்கலைத்
திறனுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. இக்கோவில்
நகரத்தார்களின் நிர்வாகத்தில் உள்ளது.

குன்றக்குடி

திருப்பத்தூரிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் பிள்ளையார்
பட்டியிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் குன்றக்குடி என்ற
இடம் உள்ளது. இவ்வூரிலுள்ள சிறிய மலையில் சண்முகநாதன்
என்ற முருகன் கோவில் உள்ளது. மலை மயில்வடிவமாக உள்ளதால்
மயில் மலை (மயூரகிரி) என அழைக்கப்படுகிறது.
அருணகிரிநாதரின் பாடல்பெற்ற தலமாகும். மலைக்கோவிலுக்கு
இராமநாதபுர சேதுபதிகள், சிவகங்கை மன்னர்கள், மருது
சகோதரர்கள், நகரத்தார் ஆகியோர் திருப்பணி புரிந்துள்ளனர்.
சந்நிதி முன்னுள்ள மண்டபத்தில் சின்னமருது, பெரியமருது
ஆகியோரின் சிற்ப உருவங்கள் உள்ளன.