மங்கைப்பாகர் என்றும், அம்மன் தேனம்மை என்றும்
அழைக்கப்படுகின்றனர். குடைவரைச் சிற்பங்கள் மிக
நேர்த்தியான வேலைப்பாட்டினைக் கொண்டுள்ளன.
மலைமீது கட்டப்பட்டுள்ள பிரான்மலைக் கோவில் தமிழ்
மக்களின் சிற்ப, கட்டடத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குகிறது.
மருது சகோதரர்கள், இராமநாதபுர சேதுபதி ஆகியோரின்
திருப்பணிகளை இக்கோவில் கொண்டுள்ளது. இக்கோவில்
குன்றக்குடி ஆதீனத்தின் நிர்வாகத்தில் உள்ளது.
பிரான்மலையின் உச்சியில் இஸ்லாமிய மக்களுக்குப்
புனிதமான தர்கா உள்ளது.
திருக்கோஷ்டியூர்
திருப்பத்தூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில்
திருக்கோஷ்டியூர் உள்ளது. இங்குப் பழமைமிக்க வைணவ
ஆலயம் உள்ளது. சௌமி நாராயணப் பெருமாளுக்காக
இது எழுப்பப்பட்டுள்ளது. வைணவப் பெரியார் இராமானுஜர்
காலத்திற்கு முன்பிருந்தே இக்கோவில் சிறந்து விளங்குகிறது.
திருக்கோஷ்டியூர் நம்பிகளிடம் இராமானுஜர் உபதேசம்
பெற்றார் எனப்படுகிறது. ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலமாக
உள்ளது.
திருக்கோஷ்டியூர் கோவிலின் புகழுக்குக் காரணம்
இக்கோவிலிலுள்ள அஷ்டாங்க விமானம் ஆகும். இந்த
அஷ்டாங்க விமானம் நான்கு தளங்களைக் கொண்டுள்ளது.
தரைமட்டத்தில் கிருஷ்ணரின் சந்நிதி உள்ளது. இதற்கு
உயரே பெருமாளின் சயனத் திருக்கோலம், அதற்கும்
உயரே பெருமாளின் நின்ற கோலம், உச்சி மாடியில்
(பரமபதநாதன்) வீற்றிருந்தகோலம் ஆகிய அழகிய
திருக்கோலங்களைக் காணலாம். ஒரே கோவிலில் பெருமாளின்
பல திருக்கோலங்களைக் காணுவது, சிறப்பு மிக்கதாகும்.
தமிழ்நாட்டில் மதுரை கூடலழகர் கோவில், காஞ்சிபுரம்
வைகுந்தப்பெருமாள் கோவில், உத்திரமேரூர் சுந்தர வரதராஜப்
பெருமாள் கோவில் ஆகிய கோவில்களிலும் அஷ்டாங்க விமான
அமைப்பு உள்ளன. அஷ்டாங்க விமானம் தமிழகக் கோயிற்
கட்டடக் கலைத்திறனுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
|