பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்293

பக்கங்களின் நீளம் 660 மீட்டர் ஆகும். இதில் நிறுவப்பட்டுள்ள
தூண்களின் எண்ணிக்கை 1212. இத்தூண்கள் ஒவ்வொன்றும் ஒரே
கல்லினாலானவை. 4 மீட்டர் உயரமுள்ளவை. இவை 2 மீட்டர்
உயரமுள்ள அதிட்டான மேடைமீது இடம் விட்டுவிட்டு
வரிசையாக நிறுவப்பட்டுள்ளன. நவீன போக்குவரவு வசதியற்ற
18ஆம் நூற்றாண்டில் கனமான கற்றூண்களைக் கொண்டுவந்து
இக்கோவிலின் நீண்ட வெளிப்பிரகாரம் அமைக்கப்பட்டிருப்பது
ஒரு கட்டட அதிசயமாகும். இந்நீண்ட பிரகாரம் கோயில்
கட்டடக் கலைக்கே ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டாக
உள்ளது. இப்பிரகாரம் அமைக்கும் திருப்பணியில் ஈடுபட்ட
சேதுபதி மன்னர்கள், அபாரமான மனித உழைப்பைச்
செலுத்திய கட்டடக் கலைஞர்கள், இதர மக்கள் யாவரையும்
நாம் போற்றாமலிருக்க முடியாது. உலகப் புகழ்பெற்ற மூன்றாம்
பிரகாரத்தைத் தவிர இக்கோவிலின் இதர பிரகாரங்களும்
கட்டடக்கலைச் சிறப்புமிக்கவை.

4. புகழ்பெற்ற வெளிப்பிரகாரத்தின் வடமேற்கு மூலையில்
கோவிலின் இராமலிங்கம் பிரதிஷ்டையான நிகழ்ச்சியைத்
தத்ரூபமாகக் காட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சுதைச்
சிற்பங்கள் உள்ளன. கோவிற் கோபுரங்களில் அமைக்கப்பட்டுள்ள
சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவையாக உள்ளன.

5. உலகச் சமயங்களின் மாநாட்டில் கலந்துகொண்டு, (1893)
இந்தியப் பண்பாட்டின் மேன்மையை உலகறியச் செய்தபின்,
சுவாமி விவேகானந்தர்,
1897ஆம் ஆண்டு (27-1-1897)
இராமேஸ்வரம் கோவிலுக்கு வருகைதந்து, “உண்மையான
வழிபாடு”
என்பதுபற்றி உரையாற்றினார். இவரது உரையின்
முக்கிய கருத்துகள், இவர் கோவிலில் உரையாற்றிய இடத்தில்
(குண கோபுர வாசலில்) கல்லில் பொறித்து நிறுவப்பட்டுள்ளது
(1974).

“சுயநலமின்மையே உண்மையான சமயப்பற்றுக்குச்
சான்று.”

“எல்லாவித வழிபாட்டின் சாரமாவது, தூய உள்ளத்துடன்
பிறருக்கு நன்மை செய்வதுதான்.”