பக்கம் எண் :

296தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

படையெடுத்தபொழுது (கி.பி. 1656) இரகுநாத சேதுபதி ஒரு
பெரும் படையுடன் சென்று திருமலை மன்னருக்கு உதவினார்.
இவருக்குப் பின் சூர்யத் தேவர் பதவிக்கு வந்தார்.

கிழவன் சேதுபதி (1674-1710) கி.பி. 1698இல் மதுரைமீது
படையெடுத்து வென்றார். ஆனால், சிறிது காலத்தில் அரசி
மங்கம்மாளின் படைகள் மதுரையை மீட்டன. கி.பி. 1702இல்
நடந்த இராமநாதபுரப் படையெடுப்பின்பொழுது அரசி
மங்கம்மாளின் தளபதி நரசப்பையன் போரில் மாண்டார்.
கி.பி. 1702க்குப் பின் கிழவன் சேதுபதி மதுரை நாயக்க
அரசின் அதிகாரத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுச் சுதந்தர
மன்னராக ஆட்சிபுரியத் தொடங்கினார் எனலாம். இவர்
இன்றைய இராமநாதபுரத்தைத் தமது தலைநகராகக் கொண்டார்.
இராமநாதபுரத்தின் நடுவில் ‘இராமலிங்க விலாசம்’ என்ற
மாளிகையைக் கட்டினார். ‘முகவை ஊரணி‘யை வெட்டுவித்தார்.
சிறப்பான இவரது ஆட்சிக் காலத்தில் இராமநாதபுரப் பகுதியில்
சமயப் பணியாற்றிய பிரிட்டோ (1647-1693) என்ற கிறித்தவப்
பாதிரியார் கொல்லப்பட்டது (1693) இராமநாதபுர வரலாற்றில்
வருந்தத்தக்க ஒரு நிதழ்ச்சியாக உள்ளது.

கிழவன் சேதுபதிக்குப்பின் முத்து விஜய ரகுநாத
சேதுபதி (1710-1725) ஆட்சிக்கு வந்தார்.

கர்நாடக நவாப் முகம்மதலி கி.பி. 1792இல் ஆங்கிலக்
கிழக்கிந்தியக் கம்பெனியாருடன் செய்துகொண்ட ஓர் உடன்
படிக்கையின்படி, ஆங்கிலேயர்கள் கர்நாடகத்தில் வரி வசூலிக்கும்
உரிமை பெற்றனர். இதன்படி இராமநாதபுரமும் ஆங்கிலேயரின்
அதிகாரத்திற்கு உட்பட்டது. கி.பி. 1795இல் முத்துராமலிங்க
சேதுபதி ஆங்கிலேயரால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
கி.பி. 1803முதல் இராமநாதபுர சேதுபதிகள் ஜமீன்தாரி
உரிமை பெற்றவர்களாயினர். மங்களேஸ்வரிநாச்சியாரும்,
அவர் வழிவந்தவர்களும் ஜமீன்தார் பதவியை வகித்தனர்.
இந்தியச் சுதந்தரத்திற்குப்பின் ஜமீன் முறை நீக்கப்பட்டது.