பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்297

பாஸ்கர சேதுபதி, சுவாமி விவேகானந்தரை உலகச்
சமயங்கள் மாநாட்டில் (கி.பி. 1893) கலந்துகொள்ளும்படி
செய்தார். 1897 ஜனவரி 24ஆம் நாள் சுவாமி விவேகானந்தர்
இராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். தம் உறவினரான
பாண்டித்துரைத் தேவர் மதுரையில் தமிழ்ச்சங்கம் நிறுவுவதற்கு
(கி.பி. 1901) பாஸ்கர சேதுபதி நிதி உதவினார்.

கி.பி. 1910இல் மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களின்
சில பகுதிகள் பிரிக்கப்பட்டு இராமநாதபுரம் என்ற புதிய
மாவட்டம் அமைக்கப்பட்டது. ஆனால், இம்மாவட்டத்திற்கு
மதுரையே தலைமையிடமாக இருந்து வருகிறது.

சண்முக ராஜேஸ்வர சேதுபதி சுதந்தர இந்தியாவில்
சென்னை மாநிலத்தின் பொதுப்பணித்துறை அமைச்சராகப்
பணியாற்றினார் (1952-57). சேதுபதி பரம்பரையினரில்
கடைசியாக வந்த இராமநாத சேதுபதி 1979ஆம் ஆண்டு
காலமானார். இவர் மனைவியான இராமநாதபுர மகாராணி
திருமதி இந்திராதேவி, தம் மகள் இராஜராஜேஸ்வரிக்காகத்
திவான் ஒருவர் உதவியுடன், இராமநாதபுர சமஸ்தானத்துக்குரிய
கோவில்களின் நிர்வாகம் முதலிய பொறுப்புகளைக்
கண்காணிக்கிறார்.

சேதுபதி மன்னர்கள் இராமநாதபுரத்தின் வளர்ச்சிக்குப்
பெரிதும் பணியாற்றியுள்ளனர். இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத
சுவாமி கோயிலின் பெரும்பகுதியை இவர்கள் கட்டினர். பல
நூற்றாண்டுகளாக இக்கோவிலுக்குத் தங்களது செல்வத்தை
வாரி வழங்கினர். வேறு பல கோவில்களையும் நிர்வகித்தனர்.
இராமநாதபுர நகரில் சேதுபதி மன்னர்கள் வாழ்ந்த
அரண்மனையும், அவர்கள் காலத்தில் பலமிக்க அரணாக
விளங்கிய கோட்டையின் எஞ்சிய பகுதிகளும் வரலாற்றுச்
சின்னங்களாக உள்ளன.

இராமலிங்க விலாசம்

சேதுபதி மன்னர்கள் ஆண்ட இராமநாதபுரத்தில்
இராமலிங்க விலாசம் என்னும் மாளிகை இன்றும் உள்ளது.
இது, சேதுபதி