மன்னர்களின் அரண்மனைப் பகுதியாகும். இம் மாளிகையைக்
கட்டியவர் கிழவன் சேதுபதி (1674-1710) ஆவார். கோட்டையின்
நடுவில் இம்மாளிகை அமைக்கப்பட்டது. இராமேஸ்வரத்திலுள்ள
இராமநாத சுவாமிமீது சேதுபதி மன்னர்களுக்கு உள்ள பற்றினால்
இராமலிங்க விலாசம் என்ற பெயரைப் பெற்றது என
அறியப்படுகிறது. முதன்முதல் சேதுபதிக்கு மகுடாபிசேகம்
செய்யப்பட்ட பளிங்கு மேடை இங்கு உள்ளது. இம்மாளிகையின்
சிறப்புக்குக் காரணம் இங்குள்ள சுவரோவியங்கள் ஆகும். இவை
கிழவன் சேதுபதிக்குப்பின் ஆட்சிக்குவந்த முத்து விஜயரகுநாத
சேதுபதி காலத்தில் (1720-1725) தீட்டப்பட்டிருக்கும் என்று
கருதப்படுகிறது. இராமலிங்க விலாசத்திலுள்ள ஓவியங்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்கவையாய் வண்ணங்கள் அழிந்துவிடாமல்
பல அரிய செய்திகளை எடுத்துரைப்பவையாக உள்ளன.
தஞ்சை மராட்டிய மன்னருக்கும் சேதுபதி மன்னர் முத்து விஜய
ரகுநாத சேதுபதிக்கும் நடந்த ஒரு போர்க்காட்சி சிறப்பாகச்
சித்திரிக்கப்பட்டுள்ளது. மாளிகை மண்டபத்தின் உள்ளே
நுழைந்ததும் இடப்புறமுள்ள சுவரில் இவ்வோவியம்
காட்சியளிக்கிறது. இம்மாளிகையின் பின் பகுதி அறையில்
இராமாயணக் கதை முழுவதையும் சித்திரிக்கும் வண்ண
ஓவியங்கள் உள்ளன. இம்மாளிகையின் மாடியில் சேதுபதி
மன்னர் தம் தேவியுடன் துயில்கொள்ளும் பள்ளி அறை
என்பதைக் குறிக்கும் ஓவியங்கள் உள்ளன.
இராமலிங்க விலாச ஓவியங்கள் தமிழ் மக்களின்
ஓவியக் கலைத்திறனுக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
மதுரை நகரில் திருமலை மன்னர் அரண்மனையில்
உள்ளதைப் போன்ற தூண் அமைப்புகள், சில இராமலிங்க
விலாசத்திலும் உள்ளன. சேதுபதி மன்னர்கள் காலத்தில்
போரில் உபயோகப்படுத்திய பலவகைக் கத்திகள், சேதுபதி
மன்னர்களின் பெரிய நிழற்படங்கள் ஆகியவற்றையும்
‘இராமலிங்க விலாசத்தில்’ காணலாம். இம்மாளிகையில்
ஆங்கில ஆட்சியாளர் ஜாக்சன் என்பவரை வீரபாண்டிய கட்ட
பொம்மன் பேட்டி கண்ட இடம் உள்ளது. மாளிகை அருகில்
‘இராஜராஜேஸ்வரி
|