பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்325

அவரது தம்பி இராஜகோபாலத் தேவர் ஆகியோர்
இக்கோவிலின் துவஜஸ்தம்பத்தைச் சுற்றியுள்ள மண்டபம்,
திரிகூட மண்டபம், சபாபதி மண்டபம், செப்பேடு வேய்ந்த
சித்திர சபை, முகப்பு மண்டபம், தெப்பக்குளம், ஐந்து தேர்கள்
ஆகியவற்றை உருவாக்கிச் சிறந்த திருப்பணி ஆற்றினர்.
திருஞானசம்பந்தரும், மாணிக்கவாசகரும் இத்தலத்தைப்பற்றிப்
பாடியுள்ளனர். கி.பி. 18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திரிகூட
ராசப்பக் கவிராயர்
‘திருக்குற்றாலத் தல புராணம்’ என்ற
நூலை இயற்றியுள்ளார்.

திருக்குற்றாலநாதர், பராசக்தி, குழல்வாய்மொழி
அம்பாள், நடராசர், கூத்தர்பிரான்
ஆகிய தெய்வங்களின்
சந்நிதிகள் இக்கோவிலில் உள்ளன. குற்றாலநாதர் ஆலயத்திற்கு
அருகில் தெப்பக்குளத்தின் எதிரில் சித்திரசபை உள்ளது. இச்சித்திர
சபை சிவபெருமானுக்குரிய ஐந்து சபைகளில் ஒன்றாகும்.

சித்திரசபையின் தூண், சுவர் தவிர ஏனைய பகுதிகள்
மரத்தாலானவை. மரக்கூரை செம்புத்தகட்டால் வேயப்பெற்றது.
சித்திரசபையிலுள்ள சித்திர நடராசருக்கு வழிபாடு
நடைபெறுகிறது. இச்சபையில் மதுரை, நாயக்க மன்னர்
திருமலை காலத்தில் வரையப்பெற்ற சித்திரங்கள் உள்ளன.
மதுரை மீனாட்சியின் கதை, மாணிக்கவாசகர் பிட்டுக்கு மண்
சுமந்த கதை, இன்னும் பல அழகிய சித்திரங்கள் இங்கு
உள்ளன. சித்திரசபையின் ஒரு மூலையில், ஒரு பெரிய மரத்
துளையினுள் வெளியே எடுக்க முடியாதபடி ஒரு மெல்லிய
மரக்குச்சி இருப்பது அதிசயமாக உள்ளது. சித்திரசபையின்
எதிரிலுள்ள தெப்பக்குளத்தின் நடு மண்டபத்திலுள்ள
கோபுரம் மிக உயரமானதாகும்.

குற்றாலநாதர் கோவிலுக்கு அருகில் குற்றால அருவி
உள்ளது. குற்றாலத்திலிருந்து சிறிது தொலைவில் பழைய குற்றால
அருவி, ஐந்தருவிகள், செண்பக அருவி, தேனருவி, புலியருவி
ஆகிய அருவிகள் உள்ளன. குற்றாலத்திற்கு அருகில் உள்ள
இலஞ்சியில் முருகன் கோவில் உள்ளது.