பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்327

32. கழுகு மலை

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில்பட்டி நகரிலிருந்து
19 கி.மீ. தொலைவில் கழுகு மலை என்ற சிற்றூர் உள்ளது.
கழுகு மலையில் நமது பண்பாட்டின் சின்னங்களாக இருப்பவை
1. முருகன் கோவில், 2. வெட்டுவான் கோவில், 3. சமணர்
சிற்பங்கள்.

முருகன் கோவில்

சம்பாதி என்ற கழுகு முனிவர் இவ்வூர் முருகனை
வழிபட்டதால் இந்த ஊர் ‘கழுகு மலை’ என்று பெயர்
பெற்றது என்று கூறுவர். இங்குள்ள மலையின் அடிவாரத்தில்,
கழுகாசல மூர்த்தி என்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.
கோவிலின் கருவறையும், அர்த்த மண்டபமும் கழுகு மலையைக்
குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. கருவறையில் முருகன்,
வள்ளி, தெய்வானையோடு காட்சியளிக்கிறார். தென்பழனி என்ற
பெயரும் இத்தலத்திற்கு உள்ளது. இது அருணகிரிநாதரின்
பாடல்பெற்ற தலம் ஆகும். இக்கோவிலிலுள்ள முருகன்
எட்டையபுர மன்னர்களின் குலதெய்வமாக வழிபடப்பட்டார்.
இம்மன்னர்களின் திருப்பணிகள் பல இக்கோவிலில் உள்ளன.

வெட்டுவான் கோவில்

கழுகுமலை ஊரின் மையப் பகுதியிலிருந்து 1 கி.மீ.
தொலைவில், இவ்வூரின் பெயரைக்கொண்ட மலை உள்ளது.
இம்மலையின் ஒரு பகுதியில் வெட்டுவான் கோவில் உள்ளது.
இக்கோவில் கி.பி. சுமார் 800இல் பாண்டிய மன்னன் ஆட்சிக்
காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.