பக்கம் எண் :

பண்பாட்டுச் சின்னங்களும்33

சித்திரம் முதலியவை காட்சியகத்தில் இடம் பெறுகின்றன.
இக்காட்சியகம் யாவரும் பார்த்துப் பயன்பெறும்படியாக உள்ளது.

உயர்நீதிமன்றக் கட்டடங்கள்

‘பாரிஸ் கார்னர்’ எனப்படும் பகுதியில் உயர்நீதிமன்றக்
கட்டடங்கள் உள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் 1862இல்
தோற்றுவிக்கப்பட்டது. உயர்நீதிமன்றக் கட்டடங்கள் 1889ஆம்
ஆண்டு தொடங்கப்பெற்று, சில ஆண்டுகளில் கட்டி
முடிக்கப்பட்டன. உயர்நீதிமன்றக் கட்டடங்களையடுத்துச்
சென்னை சட்டக் கல்லூரி
உள்ளது. உயர்நீதிமன்றம், சட்டக்
கல்லூரி ஆகியவற்றின் கட்டடங்களில் காணப்படும் குவிமாடம்
மற்றும் இதர கட்டட வேலைபாடுகள் கலைச்சிறப்புமிக்கவையாகும்.
உயர்நீதிமன்றக் கட்டடத்தின் ஒரு உச்சிப்பகுதியில் கி.பி. 1842இல்
‘கலங்கரை விளக்கம்’ அமைக்கப் பட்டது. ‘மெரினா’க் கடற்கரையில்
புதிய கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்ட பின் (1978)
உயர்நீதிமன்றக் கட்டடத்திலுள்ள கலங்கரை விளக்கம்
செயல்படுவது நின்றது.

சென்னைத் துறைமுகம்

சென்னைத் துறைமுகம் இந்தியாவிலுள்ள 10 பெரும்
துறைமுகங்களில் (Major ports) முக்கியமானதாகும். இது ஒரு
‘செயற்கை’த் துறைமுகம் ஆகும். கி.பி. 1876இல் இத்துறைமுகம்
கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1896இல் கட்டி முடிக்கப்பட்டது.
இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியத் துறைமுகமாகச் சென்னைத்
துறைமுகம் விளங்குகிறது. துறைமுகக் கட்டடப்பகுதியில் கிளைவ்
பேட்டரி என்ற இடம் உள்ளது. இங்கு இராபர்ட் கிளைவ்
தங்கியிருந்ததாகக் கூறுவர்.

போர் நினைவுக்கூடம்

தமிழக அரசின் தலைமைச் செயலகத்திற்குத் தெற்கில்
சிறிது தொலைவில் ‘போர் நினைவுக்கூடம்’ (War Memorial)
உள்ளது.