பக்கம் எண் :

34தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்

முதல் உலகப்போர் (1914-18). இரண்டாம் உலகப்போர்
(1939-45), இந்தியா-பாகிஸ்தான், ஜம்மு, காஷ்மீர் போர்
நடவடிக்கைகள் (1947-48), சீனப்படையெடுப்பு (1962),
இந்தியா-பாகிஸ்தான் போர்கள் (1965-1971) ஆகிய போர்களுக்கு
நமது மாநிலத்திலிருந்து சென்று உயிர் நீத்த வீரர்களின்
நினைவுக்காக இந்தப் போர் நினைவுக்கூடம் எழுப்பப்பட்டுள்ளது.
இது முற்றிலும் கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. கற்சுவர்களில்
உலகப் போர்களிலும் இதர சில போர்களிலும் உள்ள
முக்கியப் போர்க்களங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சென்னைப் பல்கலைக் கழகம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்னை, பம்பாய்,
கல்கத்தா ஆகிய மூன்று நகரங்களிலும் கி.பி. 1857இல் பல்கலைக்
கழகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. தமிழ்நாட்டில் முதன்
முதலாகத் தோற்றுவிக்கப்பட்ட பல்கலைக் கழகம் சென்னைப்
பல்கலைக் கழகம் ஆகும். இப்பல்கலைக் கழகம் சென்னைக்
கடற்கரை அருகில் (அண்ணா சதுக்கம் எதிரில்) உள்ளது.
1929இல் தோற்றுவிக்கப்பட்ட அண்ணாமலைப்
பல்கலைக்கழகத்திற்கு இணைப்புக் கல்லூரி இல்லாததால்
1966இல் மதுரைப் பல்கலைக் கழகம் அமைக்கும்வரை சென்னைப்
பல்கலைக் கழகம் தமிழ்நாட்டில் ஒரு பெரிய பல்கலைக்
கழகமாகத் திகழ்ந்தது. இப்பல்கலைக் கழகத்தின் புகழ்மிக்க
ஒரு துணைவேந்தர் A. லட்சுமணசாமி முதலியார் (1887-1974)
ஆவார். இவர் இப்பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக
நீண்ட காலமாகப் (1942-1974) பணியாற்றினார். இப் பல்கலைக்
கழகத்தின் நூற்றாண்டு விழாவை (1857-1957) யொட்டி ஒரு பெரிய
நினைவுக் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. சென்னைப்
பல்கலைக்கழகக் கட்டடங்கள் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கவை.
தமிழ்நாடு மாநிலத்தில் உயர்கல்வியைப் பரப்பும் ஒரு சிறந்த
ஸ்தாபனமாகச் சென்னைப் பல்கலைக் கழகம் விளங்குகிறது.