பக்கம் எண் :

36தமிழ்நாட்டின் தல வரலாறுகளும்


அமைக்கப்பட்டுள்ளது. C.N. அண்ணாதுரை ‘அறிஞர் அண்ணா’
என்று சிறப்பாக அழைக்கப்படுகிறார். இவர் கி.பி. 1909ஆம்
ஆண்டில் காஞ்சிபுரத்தில் பிறந்தார். இவர் சிறந்த
பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். ‘பெரியார்’ ஈ.வெ.ராவின்
திராவிடக் கழகத்தில் முதலில் சேர்ந்திருந்தார். பின் 1949ஆம்
ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய
கட்சியைத் தோற்றுவித்தார். 1967இல் நடந்த சென்னை மாநிலப்
பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணாவின் கட்சியினர் பெரும்
வெற்றி பெற்று அமைச்சரவை அமைத்தனர். அறிஞர் அண்ணா
முதலமைச்சரானார். அறிஞர் அண்ணாவின் முயற்சியினால் ஒரு
விசேட சட்டம் இயற்றப்பட்டுச் சென்னை மாநிலம் ‘தமிழ்நாடு’
என்ற பெயரைப் பெற்றது (1968). முதலமைச்சராக நீண்ட நாள்
இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சேவை செய்யும் வாய்ப்பு
இல்லாமல் அறிஞர் அண்ணா உடல்நலமின்றி 3-2-1969இல்
காலமானார். அறிஞர் அண்ணாவின் நினைவாக 1973ஆம்
வருடம் அண்ணா சதுக்கம் அமைக்கப்பட்டது. இச்சதுக்கத்தில்
“எதையும் தாங்கும் இதயம்” என்று எழுத்தால்
பொறிக்கப்பட்டுள்ளது. அருகில் அணையா விளக்கு ஒன்று
எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கிறது.

உலக பிரம்ம ஞான சபை (World Theosophical Society)

சென்னை நகருக்குத் தெற்கில் 5.கி.மீ. தொலைவில்
அடையாறு என்ற ஆறு செல்கிறது. அடையாறு அருகில்
உலக பிரம்மஞான சபையின் தலைமையிடம் உள்ளது.

உலக பிரம்மஞான சபை ரஷ்ய நாட்டுப் பெண்மனி
பிளாவட்ஸ்கி,
அமெரிக்கத் தளபதி ஆல்காட் என்பவர்களால்
1875ஆம் ஆண்டு நியூயார்க்கில் தோற்றுவிக்கப்பட்டது.
1879இல் இச்சபையின் தலைமையிடம் இந்தியாவில் பம்பாய்
நகருக்கு மாற்றப்பட்டது. பின் 1882ஆம் ஆண்டு இன்றைய
அடையாறு பகுதிக்கு இதன் தலைமையிடம் மாற்றப்பட்டது.
சமயச்சார்பற்ற அரசு முறையைக் கொண்டுள்ள இந்திய நாட்டில்,
தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையில் உலக
பிரம்மஞான சபையின் தலைமையிடம் அமைந்திருப்பது
சிறப்பிற்குரியது.