37. திருச்செந்தூர்
திருச்செந்தூர் என்றவுடன்
தமிழ் மக்களின் நினைவுக்கு
வருவது இங்குள்ள செந்திலாண்டவன் என்ற முருகன்
கோவிலேயாகும்.
தமிழ் மக்களின் முக்கிய தெய்வம் முருகன் ஆவார்.
முருகப்பெருமான் அசுரன் சூரபத்மனைப் போரில் வென்ற
தலம்
திருச்செந்தூராகும் என்று புராணவாயிலாக அறியப்படுகிறது.
நக்கீரர் தமது முருகாற்றுப்படையில் திருச்செந்தூரை முருகனது
இரண்டாவது படைவீடாகக் குறிப்பிடுகிறார். திருச்சீர் அலைவாய்
எனவும் இவ்விடம் அழைக்கப்படுகிறது.
திருச்செந்தூர் முருகன் கோவில் மிக்க தொன்மை
வாய்ந்ததாகும். முருகப்பெருமானின் கருவறை சுமார் 2000
ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டதாகக் கருதப்படுகிறது,
உக்கிர
பாண்டியன் என்ற மன்னன் இக்கோவிலைக் கட்டினார் என்று
கூறப்படுகிறது. கி.பி. 9ஆம் நூற்றாண்டில் மதுரையில்
ஆட்சிபுரிந்த இரண்டாம் வரகுண பாண்டியன் இக்கோவிலுக்கு
வழங்கிய தானம் ஒரு கல்வெட்டுமூலம் அறியப்படுகிறது.
இவ்வாலயத்தின் கட்டடப் பகுதிகள் எழுவதற்குப் பல
சைவத்
துறவிகள் சிறந்த பணியாற்றியுள்ளனர். இக்கோவிலின்
இராசகோபுரம் கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் திருவாவடுதுறை
மடத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமியின் திருப்பணியாகும்.
மௌன சுவாமி என்பவர் கி.பி. 1868முதல் 1909வரை இங்குத்
தங்கி இவ்வாலயத்தின் சீரிய திருப்பணிகளை மேற்கொண்டார்.
கி.பி. 1872முதல் 1884வரை காசி சுவாமி என்பவர் மௌன
சுவாமியுடன் இருந்து இக்கோவிலின் திருப்பணிகளில் பங்கு
கொண்டார். 1910முதல் 1940வரை ஆறுமுக சுவாமி என்பவர்
இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்டார். வள்ளிநாயக சுவாமி
என்பவர் இக்கோவிலின் திருப்பணியில் ஈடுபட்ட மற்றொரு
சைவத்துறவி ஆவார். பக்தர்கள் பலரின் திருப்பணிகளும்
இக்கோவிலில் உள்ளன.
|