| அன்னோரைப் புகழ்ந்துரைக்கும் நாலடியாரும் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற நூலாதல் வேண்டும் என்பது ஒருதலை’ என்று சதாசிவபண்டாரத்தார் கருதுகின்றார்.38 இவ்விரு முத்தரையரும் தனித்தனி மன்னர்களல்லர்-ஒருவனே எனவும், அவனும் பெரும்பிடுகு முத்தரையன் என்ற பெயரில் வரலாற்றில் வரும் மன்னனே யாவன் எனவும் ஒரு கருத்து ஆய்வாளரிடையே நிலவுகின்றது. இப்பெரும்பிடுகு முத்தரையனின் பெயர் செந்தலைக் கல்வெட்டில் காணப்படுகின்றது.39 இவன் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவனான முதலாம் பரமேசுவர பல்லவனின் உடன் காலத்தவனாவன். இக்கல்வெட்டுக் கூறுவதெல்லாம் ஒரு மன்னனைப் பற்றிய செய்திதானே யொழிய அவனுடைய பரம்பரையைப் பற்றியதன்று. இதை மட்டுங்கொண்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பு தமிழ் நாட்டில் முத்தரையர் என்ற ஒரு பரம்பரையே வாழ்ந்து வரவில்லை என்னும் ஒரு முடிவுக்கு வரமுடியாது. தமிழ் நாட்டின் வரலாற்றில் கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தை ஆராய்வதற்குத் துணைபுரியக்கூடிய கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் கிடைக்க வில்லை என்பது இங்குக் கருதத்தக்கது. எனவே, கி.பி. 7ஆம் நூற்றாண்டுக்கு முன்பும் முத்தரையர் வாழ்ந்து வந்திருக்கலாமாகையால் அவர்களுள் யாரையேனும் நாலடியார்ச் செய்யுள்கள் பாராட்டியிருக்கக் கூடும். சங்ககால மன்னரின் ஆட்சியையடுத்துக் களப்பிரர் என்னும் ஓரினத்தவர் தமிழகத்தின்மேல் படையெடுத்துவந்து, நாடெங்கும் கொலையும், கொள்ளையும், குழப்பமும் விளைவித்தனர். தமிழர் வாழ்வு சீரழிந்து போயிற்று. சேர, சோழ, பாண்டியரின் கோல் ஓய்ந்தது. களப்பிரர் என்னும் கொள்ளைக்கூட்டத்தைச் சேர்ந்த சிலர் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பெரும்பொருள் ஈட்டி முத்தரையர் என்னும் பெயரில் நாடாளத் தொடங்கினர் போலும். எனவே, முத்தரையர்கள் தமிழ்நாட்டில் கி.பி. 7ஆம் நூற்றாண்டில் தோன்றியவர்கள் என்று கொள்ளமுடியாது. களப்பிரர் படையெடுப்பு 4, 5ஆம் நூற்றாண்டுகளில் நேரிட்டது. ஆகவே, நாலடியாரில் குறிப்பிடப்படும் பெருமுத்தரையர்கள் இவ்விரு நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள் என்பதில் ஐயமில்லை. இச் சான்றைக்கொண்டு நாலடியார் கி.பி. 4 முதல் 7ஆம் நூற்றாண்டுக் கால அளவில் இயற்றப்பட்டதொரு நூலாகக் கொள்ளத்தகும். அண்மையில் பேராசிரியர் பி.ஜி.எல். ஸ்வாமி, களப்பிரர் கங்கரேயென்றும், 39. எபி. இந்தி, xiii பக். 134-149. |