| அவர் வெகு சிறு காலமே தமிழகத்தில் ஆண்டனரெனவும் கருதுகிறார். இவற்றை ஒப்புக்கொள்வதற்கில்லை. கீழ்க்கணக்கு நூல்களின் இலக்கிய நடைக்கும், சங்க நூல்களின் இலக்கிய நடைக்குமிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந் நூல்களின் நடை தெளிவாகவும், தேவாரப் பாடல்களின் இனிய நடை போலவும் அமைந்துள்ளது. சங்க இலக்கிய நடையோ சுருக்கமானது ; இக் காலத்தில் எளிதில் பொருள் விளக்கங் காணமுடியாதது. கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் ஒழுக்க நடைமுறைகளை வகுத்துக்காட்டுகின்றன. சமண சமயம் ஒழுக்கத்தையே உயிரினும் மேலாக ஓம்பி வந்தது. சமண ஒழுக்கம் ஆரிய ஒழுக்கத்தோடு முரண்பட்டதாகும். சமண சமயம் மிக உச்சநிலையில் விளங்கிய காலம் கி.பி. 3முதல் 7ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரையில் என்று கொள்ளலாம். எனவே, இக் கால வரம்புக்குள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், ஒரு சில தவிர்த்து, ஏனைய தோன்றியிருக்க வேண்டும். அடுத்து 7ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதற்கொண்டு சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றிக் கடவுளிடத்தில் அன்பு நெறியைப் போற்றி வளர்த்து வரலானார்கள். சமணமும் வேத நெறியும் பௌத்தத்துக்குக் கடும் எதிர்ப்பை மேற்கொள்ள லாயின. அவ்வெதிர்ப்பை ஆற்றாது பௌத்தம் தமிழகத்தினின்றும் மறைந்தே போயிற்று. இறுதியில் சமணமும் வைதிக நெறியை எதிர்த்துப் போரிட மாட்டாமல், ஆற்றல் குன்றி அடங்கிவந்தது. வாய்ப்பும் ஆக்கமுங் குன்றும் காலையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைப் போன்ற உயர்ந்த நீதி நூல்களும் இலக்கியப் படைப்புகளும் தோன்றுவது எளிதன்று. ஆகவே, இந் நூல்கள் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதிக்குள் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று கொள்ளுவது மிகையாகாது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் பதினொன்று வாழ்க்கை நெறியை விளக்குகின்றன; ஐந்து திணையொழுக்கத்தை ஓதுகின்றன; ஒன்று காலத்தைப்பற்றியது ; எஞ்சிய ஒன்று இடத்தைப்பற்றியது. வாழ்க்கை நெறியை வகுத்துக் காட்டும் திருக்குறள் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்திலும் சிறந்ததாகப் பாராட்டப்பட்டு வந்துள்ளது. களவழி நாற்பதும் முதுமொழிக் காஞ்சியும் கடைச்சங்கப் படைப்புகளாகக் கருத இடமுண்டு. களவழி நாற்பது என்பது ஒரு புறத்திணை நூல் ; போரைப் பாடுவது. சேரன் கணைக்கால் இரும்பொறையைச் சோழன் செங்கணான் போரில் வென்று சிறை செய்தான். புலவர் |