பக்கம் எண் :

சங்க இலக்கியம் 109

கூறும் ஏனைய நூல்கள் கி.பி. 5, 7ஆம் நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டிருக்க
வேண்டும். மக்கள் தம் வாழ்க்கையில் சிறப்பாகக் கடைப்பிடிக்க வேண்டியது
ஒழுக்கமேயாம் என்று இந் நூல்கள் வலியுறுத்துவதாலும், இவற்றின்
ஆசிரியர்கள் பெரும்பாலார் சமணர்களாக இருப்பதாலும், சமண சமயம் உச்ச
நிலையை எய்தியிருந்தபோது, அதாவது சைவ வைணவ பக்தி இயக்கம்
தோன்றும் முன்னர், இவை இயற்றப்பட்டிருக்க வேண்டுமென்பது ஒருதலை.
இவை கூறும் அறம் எச் சமயத்து மக்களுக்கும் பொதுவானதாகும். பொதுமறை
வகுப்பது அக் காலத்து இலக்கியச் சிறப்புகளுள் ஒன்றாகும். இவ்வொழுக்க
நூல்கள் யாவும் இனிய, எளிய நடையில், சுருக்கமான சொற்கட்டுடன்
வெண்பாச் செய்யுள்களால் ஆக்கப்பட்டுள்ளன.

     பதினெண் கீழ்க்கணக்குத் தொகுப்பில் திருக்குறள் தலைப்பிடம்
பெறுகின்றது. பழமையான இலக்கியத்தில் இது ‘முப்பால்’ என்றே குறிப்பிடப்
படுகின்றது. திருக்குறள் தோன்றிய காலத்தைப் பற்றி மிக ஆழ்ந்த கருத்து
வேறுபாடுகள் உண்டு. அதனுடைய ஆசிரியரான திருவள்ளுவருக்குப் பிற்கால
இலக்கியங்களில் பல பெயர்கள் வழங்குகின்றன. ஆனால், அவருடைய
வாழ்க்கை வரலாற்றைப்பற்றிய உண்மை ஏதும் புலப்படவில்லை.
திருவள்ளுவர் கடைச்சங்க காலத்தவர் என்றும், கி.பி. 1-3
நூற்றாண்டுகளுக்கிடையில் வாழ்ந்தவர் என்றும் சிலர் கூறுவர். திருக்குறளில்
மயிற் பீலிகளைப்பற்றிய குறிப்பு ஒன்று வருகிறது.49 திருவள்ளுவர் காலத்தில்
மயிற்பீலிகளை வண்டிகளில் ஏற்றிக்கொண்டு போயினர் என்று தெரிகிறது.
சங்ககால மக்கள் பருத்தியையும் பட்டையும் உடுத்தினர். அதற்காக அவர்கள்
பருத்தியை வேண்டுமாயின் வண்டிகளில் ஏற்றிச் சென்றிருக்கக் கூடும்.
ஆனால், வண்டிகளில் ஏற்றிப் போகுமளவுக்கு மயிற்பீலிக்குத் தேவை என்ன
இருக்கின்றது? பண்டைய கிரேக்க, ரோம நாடுகளுடனும், மேலே ஆசிய
நாடுகளுடனும், தமிழகம் விரிவானதொரு கடல் வாணிகம் செய்து வந்த
காலத்தில் மயில் தோகை இங்கிருந்து பெருமளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு
வந்தது. எனவே, ஏற்றுமதிக்கெனவே மயில் தோகைகளைக் கட்டுகளாகக் கட்டி
வண்டிகளில் ஏற்றிக்கொண்டு வணிகர்கள் துறைமுகப் பட்டினங்கட்குச்
சென்றிருப்பர். அதை நேரில் கண்டவராகிய திருவள்ளுவர் மயில்தோகை
வண்டியைத் தம் குறளில் உவமை காட்டியிருப்பார். ஆதலால்
அவர் சங்ககாலத்துக்கும் முந்தியதொரு காலத்தில் வாழ்ந்தவராவார் என்று
சில ஆய்வாளர்

     49. குறள் 475.