| மொழிவர். கடைச் சங்கத்தாரின் பார்வைக்கு வந்த இறுதியான நூல் திருக்குறள் என்றும், அவர்கள் முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தனர் என்றும், பிறகு அதை ஏற்றுக் கொண்டனர் என்றும், கடைச் சங்கம் கலைவதற்கு இந் நிகழ்ச்சியும் ஒரு காரணம் ஆகுமென்றும் கூறும் ஒரு புராண வரலாறும் உண்டு. இதைக் கொண்டு திருவள்ளுவர் காலத்தைக் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று சிலர் அறுதியிடுகின்றனர். வடமொழி நூல்களான கௌடிலியம், காமந்தகம், வாத்சயாயனம் ஆகியவை கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுந்தவை. இவற்றினின்றும் பல கருத்துகளைத் திருவள்ளுவர் ஏற்றுக் கொண்டு அவற்றைத் தம் நூலில் சேர்த்திருக்கின்றார் என்றும், அதனால் திருவள்ளுவர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் கருதுபவர் உளர். கௌடிலியரின் அர்த்தசாத்திரத்துக்கும் திருக்குறளுக்குமிடையே கருத்து ஒற்றுமைகள் பல காணப்படுவது உண்மையே. ஆனால், மனு, காமந்தகர், வாத்சயாயனர் ஆகியவர்கட்கும் திருவள்ளுவருக்குமிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகளும் உண்டு. திருக்குறளானது இல்லறத்தையும், மகளிரின் கற்புத்திறத்தையும் சிறப்பித்துப் பேசுகின்றது. இப் பண்புகள் மனுதர்மத்துக்குப் புறம்பாகும். வாத்சயாயனரின் காமசூத்திரத்துக்கும் திருவள்ளுவரின் காமத்துப்பாலுக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. பண்டைய தமிழகத்தின் திணை ஒழுக்க மரபு அடிப்படையில் காதலன்-காதலி, கணவன்-மனைவி ஆகியவரின் வாழ்க்கை நெறியைத் திருவள்ளுவர் வகுத்திருக்கின்றார். ஒத்த தலைவனும் தலைவியும் ஒருவரை யொருவர் நேராகக் காணலும், அவர்களை ஊழானது கூட்டுவிக்க, இருவரும் ஒருவர்மேல் ஒருவர் காதல் கொள்ளுவதும், பிறகு அவர்கள் திருமணம் செய்துகொள்ளுவதும், இடையில் ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு அவர்களுக்குள் சிறிது காலம் பிரிவு ஏற்படுவதும், மனைவி கணவன்பால் ஊடுவதும், கணவன் ஊடலைத் தீர்த்து வைப்பதும், பிறகு அவர்கள் கூடுவதும் தமிழரின் வாழ்க்கை முறையெனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அத்தகைய வாழ்க்கையை விளக்கியே திருவள்ளுவர் காமத்துப்பால் இயற்றியுள்ளார். ஆனால் வாத்சயாயனரோ ஆடவரும் பெண்டிரும் ஒருவரோடொருவர் கலந்து சிற்றின்பம்துய்க்கும் வகைகளையும், அச் சிற்றின்பத்தைத் தூண்டிவிடக்கூடிய இலக்கண முறைகளையும் வகுக்கின்றார். சங்க நூல்கள் பல அகப்பொருளைக் கூறுவன. சங்கப் புலவர்களுக்குச் சிற்றின்ப நுகர்ச்சியைக் கூறுவது ஒரு |