| கலையாக இருந்து வந்தது. அவர்கள் அனைவருமே வாத்சயாயனரிடம் காம நூல் பயின்றவர்கள் என்று கூறுவது எள்ளற் கிடமாகும். எனவே, பண்டைய தமிழ் முறையிலேயே திருவள்ளுவரும் காமத்துப்பாலைப் பாடினார் என்பதில் ஐயமில்லை. புலன் நுகர்ச்சியும் காதல் வாழ்வும் உலகமக்கள் அனைவருக்குமே பொதுவாகலின் வாத்சயாயனரிடம் அவற்றை அறிந்து கொள்ளவேண்டிய தேவை திருவள்ளுவருக்கு ஏற்பட்டிராது. போருக்குச் செல்லுவதும், பகைவர் கோட்டைகளை முற்றுகை யிட்டழிப்பதும், பகைக்கு அஞ்சி அரண்கள் கட்டிக் கொண்டு வாழ்வதும், பகைவரின் முற்றுகைகளை எதிர்த்து முறியடிப்பதும் உலக நாடுகள் ஒவ்வொன்றும் இயல்பாகவே மேற்கொண்டிருந்த தற்காப்பு முறைகளாகும். இவற்றை ஒரு நாடு பிறிதொரு நாட்டினரிடமிருந்து கற்றுக்கொண்டிருக்க வேண்டும் என்று கருத முடியாது. எனவே, திருவள்ளுவருக்கும் கௌடிலியருக்கு மிடையே புறத்திணை ஒழுக்கத்தைக் கூறும் வகையில் ஏதேனும் ஒற்றுமைக் கூறுபாடுகள் காணப்படுமாயின் அவை நேர்வாட்டாக ஏற்பட்டனவே அன்றித் திருவள்ளுவர் கௌடிலியரிடமிருந்து இக் கருத்துகளை ஏற்றுக்கொண்டார் என்று திட்டமாய்க் கூற இயலாது. திருக்குறளில் வடசொற் கலப்பு உளதென்றும், அதனால் அந்நூல் காலத்தால் சாலவும் பிற்பட்ட தெனவும் சிலர் கருதுவர். ஆரியரின் குடியேற்றம் விரிவடைந்து வந்ததனாலேயே தமிழில் வடசொற் கலப்புப் பெருகியிருக்கவேண்டும் என்ற நெருக்கடியில்லை. அறிஞர்கள் எதைப்பற்றி எழுதுகின்றார்கள் என்பதையும் நோக்க வேண்டும். அவர்கள் எழுதும் பொருளுக்கு ஏற்றவாறு அயல் மொழிச் சொற்களின் கலப்புக் கூடியும் குன்றியும் காணப்படுவது இயல்பே. ஆகவே, வடசொற் கலப்பைக் கொண்டு திருக்குறளின் காலம் சாலவும் பிற்பட்டதெனக் கூறுவதில் எவ்வகையினும் பொருத்தமேயில்லை. தமிழகத்தில் கி.பி. 1-2ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆரியச் சொற்கள் பல தமிழில் இடம் பெற்றுவிட்டன. சங்கப் புலவர்களுள் சிலர் பார்ப்பனக் குலத்தைச் சார்ந்தவர்கள் என்பது இங்கு நோக்கத் தக்கது. சங்க நூல்களில் காணப்படும் கருத்துகளுக்கும் திருவள்ளுவரின் கருத்துகளுக்கும் சிற்சில இடங்களில் நெருங்கிய உடன்பாடு காணப்படுகின்றது. அவற்றுள் சில பின்வருமாறு : |