பக்கம் எண் :

சங்க இலக்கியம் 113

காணப் பெறும் கருத்து ஒற்றுமைகளை அறிந்து கொள்ளலாம். இங்குச் சங்க
இலக்கியக் கருத்துகள் முந்தியனவா, அன்றிக் குறள் கருத்துகள் முந்தியனவா
என்னும் கேள்வி எழுகின்றது. சங்கப் பாட்டுகளில் பல அரிய அறிவுரைகளும்
அறவுரைகளும் பொதிந்து கிடக்கின்றன என்பதும், அறநெறிகளை விளக்கிக்
காட்டவே அப் பாட்டுகளில் பல இயற்றப்பட்டன என்பதும் அனைவரும்
அறிந்த உண்மை. எனவே, அக் கருத்துகளைத் திருவள்ளுவர் தம் நூலிலும்
எடுத்துக் கூறினார் என்பதில் இழுக்கு ஏதும் இல்லை. ஆனால், மிகச் சிறந்த
உலக அறிஞர்களுள் ஒருவரெனப் பாராட்டப் பெறும் திருவள்ளுவருக்கே பல
உயர்ந்த கருத்துகள் தோன்ற, அவற்றை அவர் குறட்பாக்களில் பொதிந்து
வைத்தார் என்பதிலும் பேருண்மை உண்டு. கடைச் சங்ககாலத்திலேயே
திருக்குறளிலிருந்து பல அரிய கருத்துகளைப் புலவர்கள் எடுத்தாளத்
தொடங்கிவிட்டனர். மேலே எடுத்துக் காட்டியுள்ள 34ஆம் புறப்பாட்டில்
அதன் ஆசிரியர், ‘என அறம்பாடிற்றே’ என்று கூறுகின்றார். அறம் என்னும்
சொல் திருக்குறளையே குறிக்கும்.

     திருவள்ளுவருக்குப் ‘பொய்யில் புலவன்’ என்றொரு சிறப்புப் பெயர்
வழங்கி வருகின்றது. திருக்குறளிலிருந்து மேற்கோள்கள் எடுத்து ஆள்வதோ,
குறள் கருத்துகளை அப்படியே தம் நூலில் விரவிப் பாடுவதோ சங்கப்
புலவர்கள் மேற்கொண்டிருந்த வழக்கமாகக் காணப்படுகின்றது. எனவே,
கடைச்சங்க காலத்தின் தொடக்கத்திலேயே திருவள்ளுவர் அழியாப் புகழ்
பெற்றுவிட்ட தம்நூலை இயற்றியிருக்க வேண்டுமென்பது அறியக்
கிடக்கின்றது. அப்பெரியார் கி.பி. முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்க
வேண்டுமெனத் தோன்றுகின்றது.

     மணிமேகலையும் சிலப்பதிகாரமும் தோன்றிய காலத்தை அடுத்து
நோக்குவோம். சங்கம் மருவிய இவ்விரு காப்பியங்களும் தமிழ்மொழியில்
மிகச் சிறந்த இலக்கியங்களாக விளங்க வருகின்றன. சிலப்பதிகாரத்துக்கு உரை
கண்ட அடியார்க்கு நல்லார் அந் நூல் உரைப்பாயிரத்தின் உரையில், ‘அவர்
(சாத்தனார்) மணிமேகலைப் பெயரால் அவள் துறவே துறவாக அறனும் வீடும்
பயப்ப ஒரு காப்பியம் செய்து அமைத்தனம் எனக் கேட்டு, இளங்கோவடிகள்
விரும்பி இவ்விரண்டனையும் ஒரு காப்பியமாக்கி...’ என்று எழுதுகின்றார்.
சிலப்பதிகாரத்துக்கு முன்பே மணிமேகலை இயற்றப்பட்டு விட்டதென இதனால்
அறிகின்றோம். ஆனால், இவ்விரு காப்பியங்கட்கும் இடையிட்ட காலம்
மிகவும் குறுகியதாகவே இருக்கவேண்டும். எனினும், இவ்