| விரு நூல்களும் ஒரே வரலாற்றின் இரு பகுதிகளாக அமைந்துள்ளன. மணிமேகலையின் பதிகத்தில் ஆசிரியரின் பெயர் ‘கூலவாணிகன் சாத்தன்’ என அறிவிக்கப்படுகின்றது. சிலப்பதிகாரத்தின் உரைப் பாயிரத்தில் இவர் ‘தண்டமிழ்ச் சாத்தன்’ என்றும், ‘மதுரைக் கூலவாணிகன் சாத்தன்’ என்றும் குறிப்பிடப்படுகின்றார். இளங்கோவடிகளைக் கூலவாணிகன் சாத்தனார் சிலப்பதிகாரத்தை இயற்றும்படி வேண்டினார் என்று இக் காப்பியத்தின் உரைப்பாயிரம் கூறுகின்றது. கண்ணகியின் வஞ்சினத்தால் பாண்டி நாடு பல இன்னல்களுக்கு உட்படலாயிற்று என்றும், பாண்டியன் சாந்தி செய்ய மழைத் தொழில் என்றும் மாறாதாயிற்றென்றும், அது கேட்டுக் கடல்சூழ் இலங்கைக் கயவாகு என்பான் கண்ணகிக்குத் தானும் பாடி விழாக்கோள் பன்முறை எடுத்தான் என்றும் இளங்கோவடிகளின் உரைபெறு கட்டுரை அறிவிக்கிறது. இலங்கையின் வரலாற்றுக்கோவையான மகாவமிசத்தின்படி கயவாகு என்றொரு மன்னன் கி.பி. 171-196 ஆண்டுகளில் இலங்கையை ஆண்டு வந்தான் என்னும் செய்தியை அறிகின்றோம். செங்குட்டுவனும் கயவாகுவும் உடன்காலத்தவர் என்பதையும், கண்ணகியின் வாணாளுக்குப் பின்னர் நடைபெற்ற விழாக்களில் கயவாகுவும் கலந்துகொண்டான் என்பதையும் மறுப்போரும் உளர். பதிற்றுப்பத்தில் ஐந்தாம் பத்துக்குப் பாட்டுடைத் தலைவன் சேரன் செங்குட்டுவன், சிங்களத்து மன்னன் கயவாகுவைப் பற்றியோ, கண்ணகிக்குச் செங்குட்டுவன் எடுப்பித்த தெய்வப் படிமத்தைப் பற்றியோ, அவன் அதைப் படைக்க வடநாட்டினின்றும் கல் கொண்டு வந்ததைப் பற்றியோ அந் நூலில் குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை.50 செங்குட்டுவன் கற்கொணர்ந்து கண்ணகிக்குப் படிவம் அமைத்ததைக் கூறும் மணிமேகலை கயவாகுவைப் பற்றி ஒன்றும் தெரிவிக்கவில்லை.51 இவ்வைந்தாம் பத்தைப் பாடிய பரணரும் இந் நூலிலேயோ, தாம் பாடிய ஏனைய பாடல்களிலேயோ கண்ணகிக்குச் சிலை எடுத்ததைப் பற்றியோ, கயவாகுவைப் பற்றியோ ஒரு குறிப்பும் கொடுக்கவில்லை. இதற்குத் தக்க காரணம் இன்னதெனப் புலப்படவில்லை. சிலர் காட்டுங் காரணங்களும் பொருத்தமானவையாகத் தோன்றவில்லை. 50. சிலப்பதிகாரத்துக் காண்க. 51. மணிமே. 26. 85 |